

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்காத வண்ணம், அடுத்த10 நாட்களுக்கு கூர்ந்து கண்காணித்து செயல்பட வேண்டும்என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியிருப்பதாக சுகாதாரத் துறை செயலர்தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்புக் கிடங்கை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத தொகுப்புக்கு தற்போது வரை 63.76 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. கூடுதலாக 5.89 லட்சம் தடுப்பூசியை மத்திய அரசு அளித்துள்ளது. மீதமுள்ள 16.75 லட்சம்தடுப்பூசியும் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதேபோல் வரும்மாதத்துக்கு 1.04 கோடி தடுப்பூசி வழங்க உள்ளது.
தற்போது 14 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. கரோனா பரவலைப் பொறுத்தவரை அடுத்த10 நாட்கள் மிகவும் கூர்ந்து கண்காணித்து செயல்பட வேண்டும். கேரள மாநிலத்தில் பண்டிகையால் தொற்று அதிகரித்தது போன்று,தமிழகத்தில் அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நாள்தோறும் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வருபவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்ய மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம். கரோனா 3-ம்அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.