

தமிழகத்தில் இரு திராவிட இயக்கங்கள்தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும். இந்த திராவிட மண்ணில் வேறு கட்சிகள் நுழைய முடியாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நீட் தேர்வு, இருமொழிக் கொள்கை விவகாரத்தில் அரசுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.
பேரவையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (அதிமுக) பேசியதாவது:
கடந்த 1967-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இரண்டு திராவிடக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. திராவிட மண்ணில் என்றும் வேறு கட்சிகள் நுழைய முடியாது. முந்தையஅதிமுக ஆட்சியில் பல நல்லதிட்டங்களை தந்துள்ளோம். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதைமனதில் வைத்து அங்கன்வாடிகளில் உள்ள பிள்ளைகளுக்காக, அருகே உள்ள பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு, அங்கு 46,691 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 1.20 லட்சம் மாணவர்களும், இந்த ஆண்டு 3 லட்சம் மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் இடைநிற்றல் 0.75 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், கரோனா காரணமாக பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இடைநிற்றலை தடுக்கும் திட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் ரூ.34,181 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது 31 பள்ளிகளில் ஒருமாணவர்கூட இல்லை. 1,255 பள்ளிகளில் 10-க்கும் குறைவானமாணவர்கள் இருந்ததால் அந்தபள்ளிகள் அருகில் உள்ளபள்ளிகளுடன் இணைக்கப்பட்டன. இவ்வாறு சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அரசும் சிறப்பாக பணியாற்றி வருவதை காண முடிகிறது.நீட்தேர்வு மற்றும் இருமொழிக் கொள்கை விவகாரத்தில் அரசுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். அப்போது, பேரவையை கண்ணியத்துடன் நடத்தி வருவதாக அவருக்கு செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்தார்.