

கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை பெரியநாயக்கன் பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் பயணிகள் ரயில், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம்நின்று செல்வது வழக்கம். இதனால் தினந்தோறும் பள்ளி, கல்லூரி களுக்கு செல்லும் மாணவர்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த பயணிகள் ரயில்சேவையை பயன்படுத்தி வந்தனர்.கடந்த 2020 மார்ச் முதல் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை யாக கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் 2021 மார்ச்மாதம் முதல் சிறப்பு ரயில் சேவையாக பயணிகள் ரயில் இயக்கப்படு வதால், இடையில் காரமடை ரயில் நிலையத்தில் மட்டும் ரயில் நின்று செல்கிறது. மேட்டுப்பாளையம்-கோவை இடையே பயண கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயிலில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தமிழக அரசு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.
எனவே, பெரியநாயக்கன் பாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் ஒருநிமிடம் நின்று சென்றால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 2016-17-ம் ஆண்டில் பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூ.2 கோடி செலவில் இங்குள்ள ரயில் நிலையம்புதுப்பிக்கப்பட்டது. தற்போது யாருக்கும் பயனில்லாமல் ரயில்நிலையம் பூட்டி வைக்கப்பட்டுள் ளது. மேலும், தற்போது பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் மேம்பால கட்டுமானப் பணிகளால், சாலை போக்கு வரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையத்தில் ரயில் நின்று செல்லாததால் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என பலரும் சாலை மார்க்கமாக பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்தி மேட்டுப்பாளையம் - கோவைபயணிகள் ரயில் பெரியநாயக்கன் பாளையத்தில் ஒருநிமிடம் நின்று செல்லவும், பழைய கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கவும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “இந்த கோரிக்கை குறித்து மனுவாக அளித்தால், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.