Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

சாஸ்திரி நகரில் மண்டை ஓடு கிடந்த விவகாரம்: மருத்துவ மாணவியின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது விசாரணையில் அம்பலம்

குப்பைத் தொட்டி அருகே மனித எலும்பு மற்றும் மண்டை ஓடு கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அவை மருத்துவ மாணவியின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

சென்னை சாஸ்திரி நகரில் குப்பைத் தொட்டி அருகில் பிளாஸ்டிக் கவரில் மனித மண்டை ஓடு, கை மற்றும் காலின் எலும்புகள் கடந்த 23-ம் தேதி கிடந்தன. தூய்மைப் பணியாளர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அவற்றைக் கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்டமாக எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிளாஸ்டிக் கவர்களை கொண்டு வந்து வீசிச் சென்றது தெரியவந்தது. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணி என்பவரது வீட்டில் காவலாளியாக வேலை செய்துவரும் பார்த்தசாரதி (60) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவசுப்பிரமணியன், தனது மகள் பெரம்பலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பு படிப்பதாகவும், உடல் கூறு இயல் பாட பயிற்சிக்காக, அவரது சீனியர் மாணவிகள் மற்றும் சுடுகாட்டு ஊழியர்களிடமிருந்து எலும்புக்கூடுகளை வாங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், தனது நண்பர் ஒருவரது காரை கடந்த 21-ம் தேதி தனது மகள் கல்லூரிக்கு செல்வதற்காக வாங்கியதாகவும், காரின் டிக்கியில், தனது மகள் எலும்புகூட்டை மறந்து வைத்துவிட்டு சென்றதாகவும், அந்த எலும்பு கூடுகள்தான் குப்பை தொட்டியில் வீசப்பட்டன எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக எழுதி வாங்கிக் கொண்டு சிவசுப்பிரமணி மற்றும் பாரத்தசாரதியை போலீஸார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நேரில் விளக்கமளிக்க மருத்துவ மாணவிக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x