Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர்கள் பதவி நீக்கம்: அறநிலையத் துறை செயலர் அரசாணை வெளியீடு

சென்னை

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர்களை பதவி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் கோயில் மிகவும் பழமை வாய்ந்த தொண்டைநாட்டுத் திருத்தலமாகும். இக்கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேயாழ்வார் அவதாரத் தலமாக அமைந்துள்ளது.

இக்கோயில் நிர்வாக திட்டத்தின் அடிப்படையில் டிரஸ்டிகள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இக்கோயிலின் தக்கார் பொறுப்புகள் கடந்த 13-ம் தேதி தன்னிச்சையாக ஏற்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் அறிவித்தார். இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர்களை பதவி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அறநிலையத் துறையின் செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பேயாழ்வார் கோயிலின் முந்தைய அறங்காவலர்களான சி.ரங்காச்சாரி மற்றும் நாதெள்ள நாராயண குப்தா ஆகியோர் இயற்கை எய்தியுள்ளதால் அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் தற்காலிக பதவி நீக்க உத்தரவுகள் மட்டும் கைவிடப்படுகிறது.

கோயிலின் முந்தைய அறங்காவலர்கள் ஐ.பி.அனந்தகுமாரி மற்றும் உம்மிடி சுதாகர் ஆகியோர் கடந்த ஜனவரி 29-ம் தேதி பதவி விலகியுள்ள நிலையில் அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் தற்காலிக பதவி நீக்க உத்தரவுகள் கைவிடப்படுவதுடன், இவர்கள் இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 26-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் சட்டப்பிரிவு 90-ன் கீழ் இவர்கள் மீது தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அறங்காவலர் குழுத் தலைவர் என்.சி.ஸ்ரீதர் ஏற்கெனவே தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதர நான்கு அறங்காவலர்களான கே.எஸ்.இராமானுஜம், கே.கிருஷ்ணன், சம்பத்குமார், சாந்தி ராவ் ஆகியோரை இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டப்பிரிவு 53(2)-ன் கீழ் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு அறநிலையத் துறையின் செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x