

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள 2 தரைப் பாலங்கள் நீரில் மூழ்கின.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. 199.27 மில்லியன் கன அடி கொள்ளளவுக் கொண்ட இந்த அணை நிரம்பியுள்ளது.
இதனால், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல், நேற்று அதிகாலை 3 மணி வரைவிநாடிக்கு 750 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. பிறகு, அணை மூடப்பட்டது.
அவ்வாறு திறக்கப்பட்ட நீர் ஆந்திர, தமிழக பகுதிகளில் உள்ளகுசா மற்றும் லவ ஆறுகள் வழியாக, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தடைந்தது.
கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீரால் பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள நெடியம், சாமந்தவாடா தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால், 2 தரைப் பாலங்களுக்கு அருகே பாதுகாப்பு பணியில் வருவாய் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதி காலைவேளையில் தரைப்பாலங்களின்மேலே ஒரு அடி உயரத்துக்கு சென்றநீர் படிப்படியாக குறைந்தது.
தமிழகத்தை வந்தடைந்துள்ள இந்த தண்ணீர் நகரி, நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, நெமிலி, அருங்குளம் பகுதிகள் வழியாக இன்று அதிகாலை பூண்டி ஏரியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆந்திர பகுதியில் மழை அதிகரித்துள்ளதால், கிருஷ்ணாபுரம் அணை மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.