Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

9 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை நாடகம்: போலீஸார் தீவிர விசாரணை; மூவர் கைது

பல்லாவரம் பகுதியில் 9 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடி, அவற்றை மறைத்து வைத்திருந்த நபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்கக் கட்டிகள், ஒரு செல்போன் மீட்கப்பட்டன.

பல்லாவரம், வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விமான பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கும் வேலையை கடந்த 3 ஆண்டுகளாக செய்து வந்தார். கடந்த 28-ம் தேதி சரவணன் தனது நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரானுக்கு சொந்தமான 9 கிலோ தங்கக் கட்டிகளை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் பகுதிக்கு எடுத்துச் சென்றார்.

அப்போது பல்லாவரம் ஆயுத்பவன் அருகே சரவணனை வழிமறித்த ஒரு கும்பல் 9 கிலோ தங்கக் கட்டிகள், ஒரு செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக, அவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது பல்லாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் புகார்தாரர் சரவணனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

அப்போது சரவணன், விமானத்தில் துபாயில் இருந்து தனது உரிமையாளருக்கு வந்த 9 கிலோ தங்கக் கட்டிகளை, தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்துமறைத்து வைத்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீஸார் இந்த வழக்கில் சரவணன்(30), அவரது நண்பர்கள், ஆலந்தூர் ஜின்னா தெருவைச் சேர்ந்த முகமது நசீர்(25), பள்ளிக்கரணை பிரபுராம்(37) ஆகிய மூவரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்கக் கட்டிகள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x