

உதவிப் பேராசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவிகள், தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அந்த பல்கலைக்கழகத்தின் 19 மாணவிகள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறோம். எங்களுக்கு பாலியல் தொல்லை அளித்த உதவிப் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் குறித்து, பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோவிடம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதியும், ஜூலை 23-ம் தேதியும் புகார் மனு அளித்தோம்.
அந்த புகார் மனுவின் நகலை மாநில ஆளுநர், முதல்வரின் தனிப்பிரிவு, உயர் கல்வித்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் மாநில மகளிர் ஆணையத்துக்கு அனுப்பியிருந்தோம்.
ஆனால், பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்காததால், மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினோம். மாணவ, மாணவிகளை சில ஆசிரியர்கள் மிரட்டினர். பொய் புகார் அளித்து ஆய்வு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஆறு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள உயர் கல்வித்துறை துணைச் செயலாளர் சுகுணாவிடம் முறையிட்டோம்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி உதவிப் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பல்கலைக்கழக கமிட்டி விசாரணை நடத்தியது.
இந்நிலையில், வினோத் வின்சென்ட் ராஜேஷை மீண்டும் பணியில் சேர்க்க, சமீபத்தில் நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு நியாயமான விசாரணை நடைபெறவும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கவும் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.