Last Updated : 26 Aug, 2021 09:40 PM

 

Published : 26 Aug 2021 09:40 PM
Last Updated : 26 Aug 2021 09:40 PM

பட்டா மாற்றுதல் காலதாமதத்தை தவிர்க்க தானியங்கி பட்டா பெயர் மாற்றத் திட்டம்: புதுச்சேரி பட்ஜெட்டில் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி

பட்டா மாற்றுதலில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு இணையவழி மூலம் தானியங்கி பட்டா பெயர் மாற்றத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் நடப்பாண்டு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஆக.26) தாக்கலான பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:

சென்னை துறைமுகக் கழகத்துடன் இணைந்து புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகளை புனரமைக்க ஆர்வமாக உள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.

பொலிவுறு நகரத் திட்டத்தின் நிதியுதவியுடன் பழைய துறைமுகம் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய நகர்புற பொழுதுபோக்கு கிராமம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் முறையே ரூ.38.42 கோடி மற்றும் ரூ.14.50 கோடி செலவில் குடிநீர்த் திட்டங்கள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.29.97 கோடி செலவில் புதுச்சேரி பிராந்தியத்தில் 60.255 கிலோ மீட்டர் நீளத்துக்கும், ரூ.3.75 கோடி செலவில் காரைக்கால் பிராந்தியத்தில் 10.41 கிலோ மீட்டர் நீளத்துக்கும் சர்வதேச தரத்தில் சாலைகள் அமைக்கப்படும். பாகூரில் புதிய பேருந்து நிலையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.

புதுச்சேரி அரிக்கமேடு, நல்லவாடு மற்றும் பெரியகாலாப்பட்டு கிராமத்தில் மீன்தரையிறக்கும் மையங்கள் ரூ.50 கோடி செலவில் மேம்படுத்தப்படும். ரூ.52.90 கோடி செலவில் நடப்பாண்டில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்.

பட்டா மாற்றுதலில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு இணையவழி மூலம் தானியங்கி பட்டா பெயர் மாற்றத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு தேவையான மென்பொருள் புதுச்சேரி தேசிய தகவலில் மையம் மூலம் உருவாக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும். இது பதிவுத்துறை ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தையும், பிரதம மந்திர வீடு கட்டும் திட்டத்தினையும் இணைத்து தற்போது கட்டுமான நிலையில் உள்ள 4,621 வீடுகளின் பயனாளிகளுக்கும் மற்றும் புதிய பயனாளிகளுக்கம் அதிகபட்சமாக ரூ.3, 50,000 நிதியுதவி வழங்கப்படும்.

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை ஒழுங்குப்படுத்தும் பொருட்டு நகர மற்றும் கிராம அமைப்புச் சட்டம் 1969, நகர மற்றும் கிராம அமைப்பு விதிகள் 1975 மற்றும் கட்டிட விதிகள் மற்றும் மண்டல ஒழுங்குமுறை விதிகளின் தேவையான திருத்தங்கள் செய்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். இத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

முருங்கப்பாக்கம் அரசு கலை மற்றும் கைவினை கிராமம் அருகில் கூடுதல் சுற்றுலாக் கட்டமைப்புகளை உருவா்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளும் தனியார் பங்களிப்போடு சிறப்பாக பராமரிக்கப்படும்.

தனியார் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் சுற்றுலா தொழில் சட்டம் உருவாக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக கைபேசி செயலி, இணையவழி சுற்றுலா தகவல் வசதி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

இ-பைக், பாரம்பரிய சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா, புதுச்சேரியின் கடற்கரைகள், நகரத்தின் பேஷன் கடைகள் மற்றும் உணவகங்கள் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹே, ஏனாம் சுற்றுலா போன்ற சுற்றுலாக்கள் தனியார் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும். நீர் விளையாட்டு மேம்படுத்தப்படும்.

புதுச்சேரியில் பாய்மரப் படகுப் பயணத் தளம் மற்றும் மணப்பட்டு பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை நிதி ஆயோக்கின் தொழில்நுட்ப நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி உருவாக்கிட முன்னுரிமை அளிக்கப்படும். பாய்மரப்படகுத் தளம் அமைப்பதற்குத் தேவையான நிலம் இந்த ஆண்டில் கண்டறியப்பட்டு இத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்.

நிர்பயா திட்டத்தின் மூலம் ரூ.4.60 கோடி செலவில் வாகன இயக்க கண்காணிப்பு மையம் போக்குவரத்து துறை அலுவலகத்தில் இந்த ஆண்டு நிறுவப்படும். அரசுக்கு நிதிச்சுமை இருப்பினும், புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து சீராக இயங்குவதற்கு ரூ.25.85 கோடி 2021-2022ல் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x