

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை பணியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு (ஐ.ஓ.சி.) சொந்தமான சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்த சிலிண்டர்களைப் பெற 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, இப்பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு ஐஓசி நிறுவனம் அதன் ஊழியர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதால் கடந்த ஆண்டு 12 சிலிண்டர் பெற முடியாதவர்களுக்கு இந்த ஆண்டு சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.