உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும்போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பேப்பர்களைப் பிரிக்கும்போது எச்சில் பட்டால், கவர்களைத் திறக்க ஊதவும் செய்வதால், தொற்றுப் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

கரோனா பரவல் காலத்தில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போது எச்சில் பட்டால் அல்லது ஊதுவதால் அது உணவுப் பொருட்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக. 26) விசாரணைக்கு வந்தபோது, உணவுப் பொருட்களைக் கையாள்பவர்கள் எச்சில் தொட்டுப் பயன்படுத்தக் கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மனுதாரர் தரப்பில் அரசாணை பிறப்பிப்பது மட்டும் போதாது என்றும், அதுகுறித்துப் போதிய அளவில் விளம்பரம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அரசு நடவடிக்கை திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தனர். உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். மேலும், வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் ஆகியோர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டனர்.

இதைச் செயல்படுத்துவதை முறைப்படுத்துவதற்காக உணவுப் பாதுகாப்பு அதிகாரியை நோடல் அதிகாரியாக நியமித்தும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியும் வழக்கை முடித்துவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in