Published : 26 Aug 2021 01:31 PM
Last Updated : 26 Aug 2021 01:31 PM

மேகதாது அணை; காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது: ராமதாஸ்

மேகதாது அணை தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது எனவும், திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை:

"காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணையை எப்படியாவது கட்டியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, 'காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் அடுத்த கூட்டத்தின் விவாதத்துக்கான பொருட்களில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் சேர்ப்பதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் என்னிடம் உறுதியளித்தார்' என்று கூறினார்.

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிப்பது சாத்தியமே இல்லை என்னும் சூழலில், இத்தகைய வாக்குறுதியை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்திருப்பது தவறு; அதை ஏற்க முடியாது.

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததில் இருந்தே, இந்த விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து விவாதிப்பதற்கான முயற்சிகளைக் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.

03.12.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து பிரச்சினை எழுப்ப கர்நாடக அரசின் பிரதிநிதிகள் முயன்ற நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மேகதாது குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்துவிட்டது.

அதன்பின், ஒவ்வொரு கூட்டத்திலும் மேகதாது அணை குறித்து கர்நாடகம் விவாதிக்க முயல்வதும், தமிழகத்தின் எதிர்ப்பால் அது கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்துக்கான விவாதப் பொருளில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைச் சேர்ப்பது நிச்சயமாக கர்நாடகத்துக்கு ஆதரவான செயலாகும். இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகளில் மத்திய அரசோ, மத்திய அமைச்சரோ ஒருபோதும் ஈடுபடக் கூடாது.

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கடைமடை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், கர்நாடகம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்தால் அதை மத்திய அரசு பரிசீலிக்காது; அதை கர்நாடகத்துக்கே திருப்பி அனுப்பிவிடும் என்பதுதான் பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், அப்போதைய மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு 2015ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் மையக்கரு ஆகும்.

அதுமட்டுமின்றி, சிவசமுத்திரம் திட்டத்துக்காக, 2014ஆம் ஆண்டு கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பிவிட்டது என்றும் உமாபாரதி கூறியிருந்தார். அதுதான் மிகவும் சரியான நடவடிக்கை.

அதே நடைமுறையைப் பின்பற்றி, தமிழகத்தின் இசைவு பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதுவும் மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதே தவறு என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், திருப்பி அனுப்புவதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.

அதை விடுத்து, முறைகேடான வழியில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மத்திய அரசே ஏற்பாடு செய்வது தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். மேகதாது அணை விவகாரத்தில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகச் செயல்பட வேண்டிய மத்திய அரசு ஒரு மாநிலத்துக்கு சாதகமாகச் செயல்படக் கூடாது.

எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்துக்கான விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை மத்திய அரசு சேர்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x