

முதல்வரின் காலில் விழுந்து வணங்கிய பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் ராஜவேலு பதவியேற்றார்.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங். - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸுக்கு முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர், அரசு கொறடா ஆகிய பதவிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒதுக்கப்பட்டன. அதேபோல் பாஜகவுக்கு சபாநாயகர், இரு அமைச்சர்கள், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் பதவிகள் ஒதுக்கப்பட்டன.
என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். ஜூன் 16-ல் பேரவைத் தலைவரும், 27-ல் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
பேரவைத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் துணை சபாநாயகர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த ராஜவேலு மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இன்று தேர்தல் நடக்கவிருந்த சூழலில், ஒருவர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்ததால் ராஜவேலு போட்டியின்றி துணை சபாநாயகராகத் தேர்வானதாகப் பேரவையில் சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் இருக்கையில் அமரவைக்க ராஜவேலுவை, முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சபாநாயகர் செல்வம் ஆகியோர் அழைத்து வந்தனர். முதல்வரின் காலில் விழுந்து வணங்கி இருக்கையில் ராஜவேலு அமர்ந்தார். இதையடுத்து அவருக்குப் பேரவையில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினர்.
தற்போது நிரப்பப்படாமல் உள்ள அரசு கொறடா மற்றும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் பதவிகளும் ஓரிரு நாளில் நிரப்பப்பட உள்ளன.