Last Updated : 26 Aug, 2021 01:14 PM

1  

Published : 26 Aug 2021 01:14 PM
Last Updated : 26 Aug 2021 01:14 PM

திருச்சி மீன் மார்க்கெட்டில் 350 கிலோ ஃபார்மலின் மீன்கள் பறிமுதல்: மக்கள் அதிர்ச்சி

திருச்சி

திருச்சி உறையூர் லிங்கம் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில், விற்பனைக்கு இருந்த ஃபார்மலின் தடவப்பட்ட மற்றும் கெட்டுப்போன 650 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு மற்றும் திருச்சி மீன்வளத்துறை துணை இயக்குநர் ஆர்.சர்மிளா, உதவி இயக்குநர் ரம்யலட்சுமி ஆகியோர் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இன்று லிங்கம் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

5 மொத்த விற்பனைக் கடைகள், 9 சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் 3 கன்டெய்னர் லாரிகளில் ஆய்வு செய்ததில், கெட்டுப்போகாமல் இருக்க மீன்களில் ஃபார்மலின் தடவியிருப்பதைக் கண்டறிந்து, 350 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், ஏற்கெனவே கெட்டுப்போயிருந்த 300 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்த 650 கிலோ மீன்களையும், உணவுப் பாதுகாப்புத் துறையினர் அரியமங்கலம் குப்பைக் கிடங்குக்குக் கொண்டுசென்று அழித்தனர்.

இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு கூறும்போது, "ரசாயனம் தடவப்பட்ட அல்லது கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக மீன் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கெட்டுப்போன மீன்களோ அல்லது ரசாயனம் தடவப்பட்ட மீன்களோ விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் 99449 59595, 95859 59595 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்" என்று தெரிவித்தார்.

மீன் மார்க்கெட்டிலேயே பயன்படுத்தக் கூடாத 650 கிலோ மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x