

தேமுதிக, தமாகாவுக்கும் சேர்த்தே தேர்தல் வேலைகளை தொடங்குங்கள் என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உற்சாகப்படுத்தியுள்ளார்.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் கடந்த 23, 24 தேதிகளில் நடந்தது. இதில் பங்கேற்ற வைகோ, ‘‘தேமுதிகவும் தமாகாவும் மக்கள் நலக் கூட்டணியில்தான் உள்ளன. எனவே, அந்தக் கட்சிகளுக்கும் சேர்த்தே தொகுதிகளில் தேர்தல் வேலைகளை தொடங்குங்கள்’’ என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: மதிமுகவில் உள்ள சில மாவட்டச் செயலாளர்கள் வைகோவின் விருப்பத்துக்காக மக்கள் நலக் கூட்டணியை ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதன் மீது பெரிய பிடிப்பில்லாமல் செயல்பட்டு வந்தனர். இந்தச் சூழலில்தான் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருச்சியில் கூட்டப்பட்டது.
அப்போது மாவட்டச் செயலாளர்களிடம் தொகுதிகளின் நிலவரம் குறித்து வைகோ பேசினார். மதிமுகவுக்கு சாதகமான தொகுதிகள் எவை என்று கேட்ட வைகோ, அதே நேரத்தில் தேமுதிக, தமாகாவுக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு எப்படி உள்ளது என்றும் கேட்டார். இதன்மூலம் மாவட்டச் செயலாளர்கள் உற்சாகமடைந்தனர். பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய வைகோ, ‘‘தேமுதிக, தமாகாவுக்கு சேர்த்து தேர்தல் வேலைகளை செய்யுங்கள். அவர்கள் நிச்சயம் நம்முடன் இணைவார்கள்’’ என்று தெரிவித்தார்.