சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணிப்பதா?- வாசன் கண்டனம்

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணிப்பதா?- வாசன் கண்டனம்
Updated on
1 min read

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடெங்கும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் வரும் 2016 -17 கல்வியாண்டு முதல் சமஸ்கிருதம் 3-வது மொழிப்பாடமாக கற்பிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது பாஜக அரசின் சமஸ்கிருத மொழித்திணிப்பு முயற்சியை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

மதம், ஜாதி, இனம், மொழி என பல வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்ற வகையில் ஒற்றுமையுடன் வாழும் நம்நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியை திணிப்பது சரியானது அல்ல. கல்வியில் எவ்வித வேறுபாட்டையும் அனுமதிக்கக் கூடாது. இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த மொழி திணிப்ப முயற்சியை எதிர்த்து தமாகா குரல் கொடுக்கும். எனவே, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 3-வது மொழியாக சமஸ்கிருதம் கற்பிக்கப்படும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்'' ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in