போக்குவரத்து சிக்னல்களை இயக்க ‘ரிமோட்’ அறிமுகம்: காவலர்கள் ஒரே இடத்தில் அமராமல் ரோந்து சென்றபடி இயக்கலாம்

போக்குவரத்து சிக்னல்களை இயக்க ‘ரிமோட்’ அறிமுகம்: காவலர்கள் ஒரே இடத்தில் அமராமல் ரோந்து சென்றபடி இயக்கலாம்
Updated on
1 min read

கோவையில் போக்குவரத்து சிக்னல்களை ‘ரிமோட்’ மூலம் காவலர்கள் இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் காவல்துறையின் சார்பில், 52 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு சிக்னல் சந்திப்புகளிலும், பிரத்யேக கூண்டில் அமர்ந்து சிக்னல் கருவிகளை போக்குவரத்து காவலர் இயக்குவார்.

காவலர்களே தன்னிச்சையாக சிக்னல்களை இயக்கும் திட்டம் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மாநகரில் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், எந்த சாலையில் வாகனங்கள் அதிகளவில் தேங்கி இருக்கிறதோ, அந்த சாலையில் பச்சை விளக்கு எரியும் வகையில் காவலர்கள் இயக்கலாம். பணியில் இல்லாதபோது, தானியங்கி முறையில் செயல்படும் வகையில் மாற்றிச் செல்வர்.

சிக்னல்களை இயக்க கூண்டிலேயே காவலர் அமர்ந்து கொள்வதால், சில வாகன ஓட்டுநர்கள் சிவப்பு விளக்கு எரிந்தாலும் நிற்காமல் செல்கின்றனர். காவலரால் உடனடியாக கீழே இறங்க முடியாது என்ற எண்ணமே வாகன ஓட்டுநர்களுக்கு விதியை மீறத் தூண்டுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சிக்னல்களை இயக்க ‘ரிமோட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.ஆர்.செந்தில்குமார் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மாநகரில் உள்ள சிக்னல்களில் விதிமீறல்களை தடுக்க ‘ரிமோட்’ மூலம் சிக்னலை இயக்கும் முறை சோதனை அடிப்படையில், டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகேயுள்ள சிக்னலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர் கையில் ‘ரிமோட்’ வைத்துக்கொண்டு சிக்னலை இயக்குவார். கூண்டில் அமராமல், நடந்தபடி சாலையை கண்காணித்துக் கொண்டே சிக்னலை இயக்கலாம். காவலர் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டுநர்கள் விதியை மீறி செல்ல மாட்டார்கள். சிக்னல்களை ஆப்ரேட் செய்யும் முறையை ஏற்படுத்திக் கொடுத்த தனியார் நிறுவனத்தினரே ‘ரிமோட்’ வசதியையும் செய்து கொடுத்துள்ளனர். சென்சார் மூலம் சிக்னலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ரிமோட்டை இயக்க முடியும். அடுத்தகட்டமாக, லாலி சாலை சிக்னல் சந்திப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். படிப்படியாக மாநகர் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்’’ என்றார்.

ரிமோட் இயங்கும் முறை

இந்த ரிமோட்டில் ஒன்று முதல் எட்டு வரை வரிசை எண்கள் உள்ளன. ஒவ்வொரு எண்ணிலும் ஒரு வழித்தடம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். போக்குவரத்து காவலர் எந்த எண்ணை அழுத்துகிறாரோ அந்த எண்ணுக்குரிய சிக்னலில் பச்சை விளக்கு எரியும். தானியங்கி முறையை பயன்படுத்துவதற்கும் பிரத்யேக எண் அதில் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in