

தமிழக ஆளுநரை, இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் கே.நட்ராஜன் சந்தித்து, தமிழக கடல் எல்லை பாதுகாப்புக் காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் கே.நட்ராஜன், கிண்டி, ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் இந்திய கடலோரக் காவல்படை ஆற்றி வரும் பணிகள் குறித்து ஆளுநரிடம் அவர் விவரித்தார்.
மேலும், கடற்பகுதியில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளித்து, தமிழக கடல் எல்லை பாதுகாப்புக்கும், மீனவர்களின் பாதுகாப்புக்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.
கடலில் எப்போதெல்லாம் மீனவர்களுக்கு இன்னல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர்களைப் பத்திரமாக மீட்கவும், கடல் வாணிபத்தை மேம்படுத்தவும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியக் கடலோர காவல்படை வழங்கும் எனவும் உறுதி அளித்தார்.
கடல் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கும், தமிழக ஆளுநர் அளித்து வரும் ஆதரவுக்கும் நட்ராஜ் நன்றி தெரிவித்தார்.
இத்தகவல் பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.