

வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை 127 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் பூங்காக்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இப்பூங்காவுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கிண்டி சிறுவர் பூங்காவுக்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்த 2 பூங்காக்களும் மூடப்பட்டன.
மாநிலத்தில் கரோனா பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில், அனைத்து உயிரியல் பூங்காக்களையும் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடந்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பூங்காக்களை திறக்குமாறும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விலங்குகள், பணியாளர், பார்வையாளர் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தி இருந்தார்.
இதைத் தொடர்ந்து இரு பூங்காக்களும் நேற்று திறக்கப்பட்டன. 127 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகள் பூங்காக்களுக்கு வந்திருந்தனர். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குநர் வி.கருணப்பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் கிருமி நாசினி திரவம் கையில் வழங்கப்படுகிறது. முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடித்து விலங்குகளை பார்வையிட வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் பூங்காவில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை பார்வையாளர்கள் கடைபிடிப்பதை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக சிங்கம் மற்றும் மான் உலாவிடங்களுக்கு வாகனங்களில் சுற்றுலா செல்லும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.