Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM

சென்னையில் தீவிரமாகும் பிளாஸ்டிக் தடை: சோதனையில் 30 டன் பறிமுதல்

சென்னை

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த விலைக்கடைகளில் மாநகராட்சி நடத்திய சோதனையில், 30 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

கரோனா பரவல் தடுப்புப் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பாண்டு ஜூலை வரை பிளாஸ்டிக் தடை செயலாக்கம் முடங்கியது. தற்போது சென்னையில் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-க்கும் கீழ் குறைந்துவிட்ட நிலையில், பிளாஸ்டிக் தடை சட்ட அமலாக்கம் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வார்டுகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தனியார் விமானநிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, பல்வேறு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த விசாரணையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலமாக விநியோகிக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பாரீஸ் பகுதியில் உள்ள மொத்த விலை பிளாஸ்டிக் விற்பனைக் கடைகளில் மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மனீஷ் எஸ்.நார்னவரே தலைமையில், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், மாநகராட்சி நல அதிகாரி எம்.ஜெகதீசன் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 30 டன்களுக்கு மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மொத்த விலை பிளாஸ்டிக் கடைகளில் சோதனை நடத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மொத்த வியாபாரிகளிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து கொண்டுவரப்படுவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x