

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டாகுளத்தைச் சேர்ந்தவர் முருகன் (30). கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் (21) என்பவர், அப்பகுதியில் பெண்களைக் கேலி செய்ததை முருகன் கண்டித்தார். இதுதொடர்பாக, இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து பெண்களை கேலி செய்ததால் கிருஷ்ணன்கோவில் போலீஸில் லாரன்ஸ் மீது முருகன் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முருகன் தனது வீட்டின் முன் மனைவி கவிதா, தாய், தம்பி ராஜா ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரன்ஸ் குடிபோதையில் முருகனுடன் தகராறு செய்துள்ளார். அப்போது, லாரன்ஸ் அரிவாளால் முருகனை வெட்டினார். தடுக்கச் சென்ற தம்பி ராஜாவுக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. பின்னர் லாரன்ஸ் தப்பியோடி விட்டார்.
பலத்த காயமடைந்த முருகன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கிருஷ்ணன்கோவில் போலீஸார் லாரன்ஸை தேடி வருகின்றனர்.