

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆலோசனையின் பேரில் திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் எழும்பூர் அசோகா ஓட்டலில் நேற்று நடந்தது.
அரசு மற்றும் தனியார் வங்கிகள், தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் சில நிறுவனங்கள் திருநங்கைகளை தேர்வு செய்வதற்காக வந்திருந்தனர். முகாமில் சுமார் 200 திருநங்கைகள் கலந்து கொண்டு வேலை கேட்டு விண்ணப்பங்கள் கொடுத்தனர்.
முகாமின் ஒருங்கிணைப்பாள ரும் கூடுதல் துணை ஆணையரு மான ஷியாமளா தேவி கூறும்போது, 'திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இந்த வேலைவாய்ப்பு முகாமின் நோக்கம். திருநங்கைகளுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருநங்கைகளுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இதுபோன்ற முகாம்களை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்' என்றார்.