

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரம் செயல்படும் ஸ்கேன் மையம் இல்லாததால், குழந்தைகளுக்கு ஸ்கேன் எடுக்க பெற்றோர் அலைக்கழிக்கப்படும் அவலம் உள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 3,500-க்கும் மேற்பட்ட நோயா ளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சிறுவர்கள், குழந்தைகள் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகின்றனர். குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக மருத்து வமனையில் குழந்தைகள் சிகிச் சைப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது.
கேரளா மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் குழந்தை களும், இங்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்றனர். ஆனால், இந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் ஊழியர் பற்றாக்குறையால் பிற்பகல் 12 மணி வரை மட்டும் படம் எடுக்கப் படுகிறது.
பிற்பகல் 12 மணி முதல் இரவு வரை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்க பச்சிளம் குழந்தைகளை பெற்றோர் தூக்கிக் கொண்டு தொலைவில் நுழைவுவாயில் அருகே செயல்படும் ஸ்கேன், எக்ஸ்ரே மையத்துக்குச் செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது.
மருத்துவமனை வளாகத்தில் கூட்ட நெரிசலில் நோய் முற்றிய குழந்தைகளை பெற்றோர் பிற்பகல், மாலை நேரங்களில் ஸ்கேன் மையத்துக்குத் தூக் கிச் செல்ல மிகுந்த சிரமம் அடை கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தேனி மாவட்டம், சோழதேவன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன், அவரது மனைவி ப்ரியா தங்களது 2 வயது குழந்தைக்கு சளி பாதிப்பு இருந்ததால் ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். மருத்துவர்கள் பரிசோ தித்ததில், குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. உடனே, அந்த குழந்தையின் நுரையீரலில் இருக்கும் சளி அகற்றப்பட்டு ட்ரிப் ஏற்றப்பட்டது.
நேற்று பிற்பகல் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்க ட்ரிப் ஏற்றப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயி லில் நுழைவுவாயில் அருகே செயல்படும் ஸ்கேன் மையத்துக்கு பெற்றோர் தூக்கிச் சென்றனர். அப்போது, கூட்ட நெரிசலில் குழந்தையை ஸ்கேன் எடுக்க எடுத்துச் செல்ல முடியாமல் தவித்தனர்.
அதனால், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவிலேயே 24 மணி நேரமும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மருத்துவம னை டீன் எம்.ஆர். வைர முத்துராஜூவிடம் கேட்ட போது, ரேடியாலஜி ஊழியர் பற்றாக் குறையால் 24 மணி நேரமும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஸ்கேன் எடுக்க முடியவில்லை. மேலும் நுட்பமான ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கவே 6-ம் நம்பரில் செயல்படும் ஸ்கேன் மையத்துக்குத்தான் வரச் சொல்கின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவால், நோய் பாதித்த குழந்தைகளை வார்டுகளை விட்டு வெளியே வரும்போது பெற்றோர்தான் எடுத்துச் செல்லவேண்டும் என்பதால் மருத்துவப் பணியாளர்களை அனுப்புவதில்லை என்றார்.