Last Updated : 26 Aug, 2021 03:15 AM

 

Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM

அல்லூர் பரிசல்துறை- வண்ணத்துப்பூச்சி பூங்காவை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே ‘ரோப் கார்’ சேவை போக்குவரத்து: அரசுத் துறைகளுடன் இணைந்து ஆய்வு செய்ய வனத் துறை திட்டம்

திருச்சி

திருச்சி அருகே அல்லூர் பரிசல்துறையிலிருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ‘ரோப் கார்’ சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஆய்வு செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் மேலூர் அருகே 27 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 300 வகையான தாவரங்கள், 100-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன.

பாலத்துக்கு பதில் ரோப் கார்

இங்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ரங்கத்தில் இருந்து மேலூர் வழியாகவும், கொள்ளிடம் சோதனைச்சாவடி பகுதியிலிருந்து கொள்ளிடக்கரை வழியாகவும் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு சாலை வசதி உள்ளது. மேலும் முக்கொம்பில் இருந்து ஊசிப்பாலம் வழியாக வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை காவிரி ஆற்றின் கரையில் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதுதவிர திருச்சி - கரூர் சாலையில் அல்லூர் பரிசல்துறை பகுதியிலிருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தற்போது பாலம் கட்டுவதற்கு பதிலாக, காவிரி ஆற்றின் குறுக்கே ‘ரோப் கார்’ போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவது குறித்து வனத் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரூர் சாலையிலிருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு செல்ல பாலம் அமைக்காமல் ‘ரோப் கார்’ வசதி செய்து கொடுத்தால் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும். இதனால், முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வரக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கையும் உயரும். இதன் மூலம் அரசு வருவாய் அதிகரிக்கும்.

தமிழகத்தில் முதல்முறை

அசாம் கவுகாத்தியில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கிலும், மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள துவாந்தர் நீர்வீழ்ச்சி மீதும் ஏற்கெனவே ‘ரோப் கார்’ திட்டம் பாதுகாப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றைப் பின்பற்றி தமிழகத்தில் முதல்முறையாக காவிரி ஆற்றின் குறுக்கே ‘ரோப் கார்’ வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து நீர்வளம், பொதுப்பணி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளுடன் ஆலோசிக்க உள்ளோம்.இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டால், திருச்சியின் சுற்றுலா வளர்ச்சி உலகத்தரத்துக்கு மேம்படும்’’ என்றனர்.

பச்சமலையில் சாகச சுற்றுலா

திருச்சி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றான பச்சமலையில் தற்போது வனத்துறை மூலம் ‘சூழல் சுற்றுலா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு அதிகளவிலான பார்வையாளர்களை வரவழைக்கும் வகையில் ‘பாரா கிளைடிங்’, இரு மலைகளுக்கு இடையே ‘ரோப் கார்’ பயணம், அருவி மற்றும் ஓடைகளை ஒட்டிய பகுதிகளில் ‘ட்ரக்கிங்’ உள்ளிட்ட சாகச சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்த பச்சமலையில் தகுந்த இடங்களை தேர்வு செய்யும் பணிகளில் வருவாய்த்துறை, சுற்றுலாத் துறை, வனத் துறையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x