

வீடுகளிலேயே குப்பையிலி ருந்து உரம் தயார் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் நாளொன்றுக்கு 170 மெட்ரிக் டன் குப்பை உருவாகிறது. இதில், 102 டன் மக்கும் தன்மையுடையது. 68 மெட்ரிக் டன் மக்காத தன்மையுடையது. மக்கும் குப்பையை ராமையன்பட்டி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லாமல், அவற்றிலிருந்து உரம் தயாரிப்பதற்காக மாநகராட்சியில் 45 இடங்களில் நுண் உர மையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை, தாங்களே கையாண்டு, உரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சியில் வி.எம். சத்திரம் பகுதியில் `வி.எம். சத்திரம் மேம்பாடு அமைப்பு’ மூலம், 500 வீடுகளில் பைப் கம்போஸ்டிங் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை வி.எம். சத்திரம் கவிதா நகரில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் ஆட்சியர் கூறும்போது, `இத்திட்டத்தின்கீழ் துளையிடப்பட்ட 5 அடி உயரம் கொண்ட பிவிசி பைப்புகள் 2 வீதம் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த குழாய்களை தங்கள் வீட்டு வளாகத்தில் ஓரடி ஆழ குழியில் செங்குத்தாக நிற்கும் வகையில் அமைக்க வேண்டும். அன்றாடம் வீட்டில் உருவாகும் காய்கறி மற்றும் உணவு உள்ளிட்ட சமையலறை கழிவுகளை இந்த குழாக்குள் அன்றாடம் போட்டுவர வேண்டும். ஒரு குழாய் நிறைந்தவுடன் அடுத்த குழாயை பயன்படுத்த வேண்டும். முதல் குழாயை 45 நாட்கள் கழித்து மண்ணிலிருந்து உருவி உள்ளேயிருக்கும் உரத்தை எடுத்து பயன்படுத்தலாம். அதன்பின் அதே இடத்தில் குழாயை புதைத்தும் மீண்டும் உரம் தயாரிக்கலாம். இந்த உரத்தை வீட்டுத்தோட்டங்கள், பூந்தோட்ட ங்களுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் நம் வீட்டின் கழிவை நாமே உபயோகமானதாக மாற்றிய திருப்தியும், பெருமையும் நமக்கு கிடைக்கும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கு வகிப்பதுடன், நோய் பரவலையும் தடுக்கிறோம். இது முன்மாதிரியான செயல்முறை என்பதால் ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மாநகராட்சியை தொடர்பு கொண்டு தங்கள் பகுதிகளிலும் செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார ஆய்வாளர் சங்கர நாரயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.