

மகளிர் காங்கிரஸின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று முகப்பேரில் நடந்தது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான நடிகை நக்மா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காமராஜர், கக்கன் போன்ற தலைசிறந்த தலைவர்கள் தமிழக காங்கிரஸில் இருந்து மக்கள் பணியாற்றியுள்ளார்கள். பிஹாரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ்- திமுக கூட்டணி நட்பு ரீதியான கூட்டணி. அந்த கூட்டணி வெற்றி பெற மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் இலவசங்கள் மட்டுமே இன்றைய மாநில அரசு வழங்கியுள்ளது. இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு வழங்கவில்லை.
காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை மத்திய பாஜக அரசு முடக்குகிறது.
காங்கிரஸ்- திமுக கூட்டணி ஊழல் கூட்டணி என கூறும் பாஜகவினர், வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜின் பங்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தங்கள் மீது இருப்பதை மறந்துவிட்டார்கள்.
பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ்- திமுக கூட்டணியை பூஜ்ய கூட்டணி என்று கூறியுள்ளது கண்டனத்துக்குரியது. திமுக விரும்பினால், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.