கொடைக்கானல் ஏரியில் படகு சவாரிக்குப் பல மடங்கு கட்டணம் உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள். 
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள். 
Updated on
1 min read

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்யப் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இரண்டு படகு குழாம்கள் உள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலாப் பயணிகள் செல்ல இயக்கப்பட்டு வருகின்றன.

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு திங்கட்கிழமை முதல் படகு சவாரி மீண்டும் தொடங்கியது. இருவர் பயணம் செய்யும் மிதி படகுக் கட்டணம் முன்பு ரூ.100 ஆக இருந்தது. தற்போது ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நான்கு நபர்கள் செல்லும் மிதிபடகுக் கட்டணம் ரூ.200 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு நபர்கள் செல்லும் படகு கட்டணம் ரூ.300 லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டண விவரம்.
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டண விவரம்.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் படகு சவாரி செய்ய மற்ற நாட்களில் நடைமுறைக்கு வந்த புதிய கட்டணத்தில் இருந்து மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இருநபர் மிதிபடகு சாதாரண நாட்களில் ரூ.150 என்ற புதிய கட்டணம், வார விடுமுறை நாட்களில் ரூ.200 ஆக வசூலிக்கப்படவுள்ளது.

இதேபோல் அனைத்துப் பிரிவு படகுகளின் கட்டணமும் வார விடுமுறை நாட்களில் புதிய கட்டணத்தில் இருந்து மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ் கட்டணம் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் படகு சவாரிக்குக் காத்திருக்காமல் உடனடியாகப் படகு சவாரி செய்வதற்கு புதிய கட்டணத்தில் இருந்து அனைத்துப் பிரிவு படகுகளுக்கும் தலா ரூ.100 அதிகம் வசூலிக்கப்படவுள்ளது.

சுற்றுலாத் துறையினரின் புதிய கட்டண உயர்வு அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். படகு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in