கரும்பு விலை டன்னுக்கு ரூ.50 உயர்த்தி அறிவிப்பு: விவசாயிகள் ஏமாற்றம்

கரும்பு விலை டன்னுக்கு ரூ.50 உயர்த்தி அறிவிப்பு: விவசாயிகள் ஏமாற்றம்
Updated on
1 min read

கொள்முதல் செய்யப்படும் கரும்பு விலை டன்னுக்கு ரூ.50 உயர்த்தி 2,900 ஆக வழங்கப்படும் என மத்திய அரசின் இன்றைய அறிவிப்பால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்துத் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுந்தர விமல்நாதன் கூறியதாவது:

''மத்திய அரசு கரும்புக்கு இன்று அறிவித்த நியாயமான மற்றும் லாபகரமான விலை, நியாயமற்றதாக இருக்கிறது. கடந்த ஆண்டு கரும்புக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை டன்னுக்கு ரூ.2,850 என அறிவிக்கப்பட்டது. தற்போது, இதைவிட ரூ.50 மட்டுமே உயர்த்தி டன்னுக்கு ரூ.2,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை வருகிற அக்.1-ம் தேதி முதல் 2022-ம் ஆண்டு செப்.30-ம் தேதி வரை அமலில் இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் விலை உயர்வு, விவசாயத் தொழிலாளர்களின் கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை எல்லாம் கருத்தில்கொள்ளாமல் விலையை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த விலையும் 10 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு மட்டுமே கிடைக்கும். இந்த அறிவிப்பின்படி தமிழகத்திலுள்ள விவசாயிகளுக்கு 9 சதவீதப் பிழிதிறன் மட்டுமே இருப்பதால் அதன் அடிப்படையில் டன்னுக்கு ரூ. 2,750 மட்டுமே கிடைக்கும். கரோனா காலத்தில் உற்பத்திச் செலவு, இடைநிலைச் செலவு உள்ளிட்டவை அதிகமாக உள்ள நிலையில் இந்த விலை அறிவிப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, இதை மறுபரிசீலனை செய்து, மீண்டும் அறிவிக்க வேண்டும்''.

இவ்வாறு சுந்தர விமல்நாதன் தெரிவித்தார்.

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் பி.கோவிந்தராஜ் கூறுகையில், ''கரும்புக்கான உற்பத்திச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 விலை கேட்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 மட்டுமே உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விவசாயிகளைப் பற்றி பிரதமர் ஒவ்வொரு முறையும் புகழ்ந்துகொண்டே இருக்கிறார். ஆனால், விவசாயிகள், விளைபொருட்களுக்கான விலை அறிவிப்பில் மட்டும் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறார்கள்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in