Published : 25 Aug 2021 07:20 PM
Last Updated : 25 Aug 2021 07:20 PM

தேமுதிக எனும் வேர் என்றும் அழியாது; விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குப் பயணம்: விஜயபிரபாகரன்

திருப்பூர் டைமண்ட் திரையரங்கம் பகுதியில் இன்று பேசிய விஜயபிரபாகரன், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர்

தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த், விரைவில் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி, அவரது மகன் விஜயபிரபாகரன் திருப்பூர் டைமண்ட் திரையரங்கம் மற்றும் பல்லடம் சாலைகளில் பலருக்கும் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''விஜயகாந்தின் 69-வது பிறந்த நாளைத் திருப்பூரில் தொண்டர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. தேமுதிகவை எதற்காக ஆரம்பித்தோமோ அந்த நோக்கத்தை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம். தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பானதுதான். தேமுதிக எனும் வேர் என்றும் அழியாது. அந்த வேர் ஆலமரமாக வளரும். எத்தனை பேர் கட்சியை விட்டுச் சென்றாலும், ஆலமரம் வளரும். விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லை என்பதால் யாரும் பயப்பட வேண்டாம்.

அவர் மீண்டும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளார். மிக விரைவில், சிகிச்சை முடித்துவிட்டு பழைய நிலைக்குத் திரும்புவார். இளைஞர்களுக்கு உறுதுணையாக தேமுதிக இருக்கும். சமூக வலைதளங்களை நாம் அதிக அளவில் பயன்படுத்தி, கட்சியை மேலும் வளர்ப்போம்.

விஜயகாந்தைப் பார்த்து இன்றைக்குப் பலர் அரசியலுக்கு வருகிறார்கள். அவருக்காக நாம் அனைவரும் இன்றைக்கு அரசியலில் இறங்கியுள்ளோம். அரசியலில் நாம் முன்னேறிச் செல்வோம். காசு, பணம் வேண்டாம். தமிழக மக்களின் அன்பு போதும். நீங்கள் என்னைத் தூக்கி எறிந்தாலும் சுவரில் அடித்த பந்து போல் திரும்ப உங்களிடம் வருவேன்.

சுவரொட்டி ஒட்டுவது முக்கியமில்லை; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தோல்வியை வெற்றியாக்கும் திறமை தேமுதிகவுக்கு உண்டு. தேர்தலிலும் மக்கள் ஆதரவு தர வேண்டும். 40 வருடம் சினிமாவிலும், 15 வருடம் அரசியலில் போராடுகிறார் விஜயகாந்த். விருப்பு, வெறுப்புகளைத் தூக்கி வீசிவிட்டு அனைத்து நிர்வாகிகளும் கட்சியை வலுப்படுத்த வேண்டும். 2006-ம் ஆண்டு இந்தக் கட்சி எப்படி இருந்ததோ, மீண்டும் அப்படிக் கட்சி வர நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்''.

இவ்வாறு விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x