Published : 25 Aug 2021 06:07 PM
Last Updated : 25 Aug 2021 06:07 PM

டன்னுக்கு ரூ.2,755; கரும்பு கொள்முதல் விலை போதாது - உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 25) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2,900 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,755 மட்டுமே வழங்கப்படும். இந்த கொள்முதல் விலை போதுமானதல்ல.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 10% சர்க்கரைத் திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு நியாய மற்றும் ஆதாய விலையாக ரூ.2,850 வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.50 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

9.50% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான நியாய மற்றும் ஆதாய விலை ரூ.2,707.50-ல் இருந்து ரூ.2,755 ஆக, அதாவது டன்னுக்கு ரூ.47.50 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்பின் சர்க்கரைத் திறன் 9.5%-க்கும் குறைவாகவே இருக்கும் என்பதால், டன்னுக்கு ரூ.2,755 கிடைக்கும். இந்த விலை போதுமானதல்ல... விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை, கரும்புக்கான கொள்முதல் விலையை தீர்மானம் செய்வதில், மாநில அரசுகள் கடைபிடிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றால் தமிழக விவசாயிகள் தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு அறிவிக்கும் விலைக்கு மேல் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2016-17 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அப்போது, மத்திய அரசின் விலை, மாநில அரசின் ஊக்கத்தொகை ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு டன்னுக்கு ரூ.2,750 கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது.

அதன்பின், வருவாய்ப்பகிர்வு முறைப்படி கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடைமுறைகள் இன்னும் முடிவடையாத நிலையில், விவசாயிகளுக்கு இடைக்கால ஏற்பாடாக டன்னுக்கு ரூ.2,750 மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் விலையை சர்க்கரை ஆலைகளும், மீதமுள்ள தொகையை தமிழக அரசு ஊக்கத்தொகையாகவும் வழங்குகின்றன.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கொள்முதல் விலைப்படி தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.5 மட்டுமே கூடுதலாக கிடைக்கும். தமிழக அரசின் சார்பில் புதிதாக அறிவிக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவுள்ள கூடுதல் ஊக்கத்தொகை ரூ.150-ஐயும் சேர்த்தால் ரூ.155 மட்டுமே கூடுதலாக கிடைக்கும். இது எந்த வகையிலும் ஏற்க முடியாத குறைந்த விலையாகும். தமிழகம் தவிர்த்த பிற மாநில விவசாயிகளுக்கும் இந்த கொள்முதல் விலை ஏமாற்றத்தையே அளிக்கும்.

தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வகுத்துள்ள அளவீடுகளின்படி, ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.2,985 செலவாகிறது. அவ்வாறு இருக்கும் போது கொள்முதல் விலையாக ரூ.2,905 மட்டுமே வழங்கப்பட்டால், விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும்.

பிற மாநிலங்களில் 10% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்பு ஒரு டன் உற்பத்தி செய்ய ரூ.3,200 முதல் ரூ.3,500 வரை செலவு ஆவதாக விவசாய அமைப்புகள் கூறியுள்ளன. அத்தகைய கரும்புகளுக்கு ரூ.2,900 விலை நிர்ணயிக்கப்பட்டால் அது எந்த வகையில் நியாயமான மற்றும் ஆதாயமான விலையாக இருக்க முடியும்?

தமிழகத்தைப் பொறுத்தவரை 2016-17 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,750 கிடைத்தது. இப்போது ரூ.2,755 கிடைக்கும். 5 ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் விலை ரூ.5 மட்டுமே உயர்ந்தால் விவசாயிகளின் வருமானத்தை எவ்வாறு இரட்டிப்பாக்க முடியும்? சர்க்கரை ஆலைகளின் நலனில் காட்டும் அக்கறையை விவசாயிகள் நலனில் மத்திய, மாநில அரசுகள் காட்டாதது தான் இந்த நிலைக்கு காரணம்.

தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,500 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டால் தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அதைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் கரும்பு விலையை உயர்த்தி அமைக்க வேண்டும். மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலையை குறைந்தபட்சம் டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச ஊக்கத்தொகையான 200 ரூபாயை இனி வழங்க வேண்டியிருக்காது என்பதால், அதையும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஊக்கத்தொகையுடன் இணைத்து ரூ.350 ஆக வழங்க வேண்டும். இதற்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.140 கோடி கூடுதலாக செலவாகும். அதே நேரத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,350 கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்பது உறுதி".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x