

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிப்பதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உச்சம் தொட்ட கரோனா வைரஸ் இரண்டாம் அலை, படிப்படியாகக் குறைந்து தினசரி தொற்று எண்ணிக்கை 2,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நேற்று முன்தினம் (ஆக. 23) அமலுக்கு வந்துள்ள புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், திரையரங்குகள் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த அறிவிப்பு, புதிய ஊரடங்கு தளர்வுகளில் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிப்பதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அத்துறை இன்று (ஆக. 25) வெளியிட்ட அறிவிப்பில், செப். 1-ம் தேதி பள்ளிகள் திறந்த பின்னர் ஒரு வாரம் கழித்து கரோனா குறைந்திருந்தால், மத வழிபாட்டுத் தலங்களுக்கான தடையை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.