

முதல்வர் ஸ்டாலினை ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறார்கள் என, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 25) சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் பேரவையில் பேசியதாவது:
"தமிழ்ச் சமுதாயம் ஏற்றம் பெற காரணமாக இருந்தவர்கள் நான்கு தலைவர்கள். அவர்கள் பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, கருணாநிதி. இவர்கள் நால்வரையும் தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் நன்றியோடு நினைவுகூற வேண்டும். நவீன தமிழகத்துக்கு அடித்தளமிட்டவர்கள் இவர்கள்தான்.
திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி என்பது ஒரு கொள்கைக் கூட்டணி. அதற்கு நோக்கம் உண்டு. அந்த வகையில் தான் அந்த கூட்டணியை தமிழக மக்கள் ஆதரித்திருக்கிறார்கள்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டவர் திமுக தலைவரான இன்றைய முதல்வர். அன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த கூட்டத்துக்கான அழைப்பிதழில் சோனியா காந்தி பெயர் மட்டும் தான் இருந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தில் அவரை வரவழைத்து, அவர் முன்பாக அவரை பிரதமர் வேட்பாளராக பிரகடனம் செய்த முதல்வரை ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறார்கள்.
அவரின் தொலைநோக்கு பார்வையின் காரணமாகத் தான் 38 இடங்களிலும் மகத்தான வெற்றியை பெற்று பாஜகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற நிலையை ஏற்படுத்திய பெருமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உண்டு.
வியூகம் வகுப்பதில் கருணாநிதி ஒரு சாணக்கியர். அவரையும் மிஞ்சுகிற வகையில் உங்களது வியூகம் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறது.
வெள்ளை அறிக்கை
நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் மூலம் கடந்த கால அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பொருளாதார சீரழிவுகள் ஆதாரத்தோடு அம்பலத்துக்கு வந்துள்ளன.
எந்த ஆட்சியின் 100 நாள் சாதனைகளும் இப்போது பேசப்படுவது போல் எப்போதும் பேசப்பட்டதில்லை. அதற்குக் காரணம், நூறு நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனைகளை நிகழ்த்தியவராக நமது முதல்வர் விளங்குகிறார்.இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் முதன் முதலாக வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த பெருமை திமுக ஆட்சிக்குத் தான் உண்டு.
நடப்பு ஆண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், 1 லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய முயற்சி மேற்கொள்வது மிகுந்த புரட்சிகரமான திட்டம்.
அனைவருக்கும் புரிந்து மனம் நெகிழக் கூடிய அன்னை தமிழில் அர்ச்சனை ஸ்டாலின் ஆட்சியில் அரங்கேறியுள்ளது. இத்தகைய புரட்சியை செய்த முதல்வரை தமிழ்ச் சமுதாயம் உள்ளவரை நினைவில் கொண்டு போற்றும்.
முதல்வரை இந்த நாடே உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் பீடுநடை போடுகிற காலம் வெகு தொலைவில் இல்லை.
பொது விநியோகத்துறை
தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் புழுங்கல் அரிசி தரம் குறைந்ததாகவும், மக்கள் உண்பதற்கு இயலாத நிலையில் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கொள்முதல் செய்யப்படும் மொத்த அரிசியில் 9.5 சதவிகிதம் சேதாரம் என ஏற்றுக் கொள்ளப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், அரிசியின் தரம் குறைவதுடன், மொத்தமாக கொள்முதல் செய்யும் அரிசியில் 10 இல் 1 பங்கு சேதாரமாவதால் அரசு பணம் வீணாகிறது.
அரசின் கொள்முதல் விலை ஒரு குவிண்டால் அரிசி ரூபாய் 3726.26. ஒரு கிலோ அரிசி விலை ரூ.37.27. இத்துடன் போக்குவரத்து கட்டணத்தை சேர்த்தால் ஒரு கிலோ அரிசி ரூபாய் 40-க்கு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் 100 சதவிகித கொள்முதல் அரிசியில் 90 சதவிகிதம் மட்டுமே நல்ல அரிசியாகும்.
எனவே, அரசு கொள்முதல் செய்யும் அரிசியின் தரக் கட்டுப்பாட்டினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறேன்.
தமிழகத்தில், தரமான அரிசி பொதுச் சந்தையில் தாராளமாக கிடைக்கிற போது தரமற்ற அரிசியினை அண்டை மாநிலங்களில் இந்திய உணவு கழகம் மூலம் எதற்காக கொள்முதல் செய்ய வேண்டும் ? இதை அரசு பரிசீலனை செய்து நல்ல முடிவினை எடுத்திட வேண்டுகிறேன்".
இவ்வாறு அவர் பேசினார்.