Published : 15 Feb 2016 10:43 AM
Last Updated : 15 Feb 2016 10:43 AM

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியர்களும் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றமா? - பாதிப்பு நேருமோ என அரசு கல்லூரி ஆசிரியர்கள் அச்சம்

அரசு பல்கலைக்கழகமாக மாற்றப் பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை அறிவியல் பேராசிரியர்களை தொடர்ந்து பொறியியல் துறை பேராசிரியர்களும் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

நீண்ட காலமாக அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகமாக இயங்கி வந்த சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பல்கலைக்கழகமாக மாற்றப் பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் குளறுபடி, நிதி நெருக்கடி, ஆசிரியர்கள், பணி யாளர்கள் பாதுகாப்பு கருதி தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள், அலுவலர் கள், பணியாளர்கள் என 12,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை மிக அதிகமான ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் இங்கு பணிபுரிந்து வருவதாக கண்டறியப் பட்டது.

தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களையும், ஊழியர் களையும் காலியாக உள்ள வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்தால் நிர்வாகச் செலவினங்களை குறைக்கலாம் என்று பல்கலைக்கழக புதிய நிர்வாகம் முடிவெடுத்தது.

இதைத் தொடர்ந்து, கலை அறிவியல் உதவி பேராசிரியர்கள் 370 பேரை 3 ஆண்டு அயல்பணி அடிப்படையில் இடமாற்றம் செய்ய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

எதிர்ப்பு

உதவி பேராசிரியர்களை அயல்பணி என்று சொல்லி முதலில் இடமாற்றம் செய்துவிட்டு பின்னர் அவர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படலாம் என்பதால் தங்களின் பணிக்கும் பதவி உயர்வுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

தொடர்ந்து, 2,500-க்கும் மேற்பட்ட அலுவலர்களையும், ஊழியர்களையும் வேறு பல் கலைக்கழகங்களுக்கும், வேறு அரசு கல்லூரிகளுக்கும் இடமாற் றம் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், அரசு கல்லூரிகளிலும் காலி யாகவுள்ள அலுவலர்கள், குரூப்-சி, குரூப்-டி பணியாளர்கள் விவரப் பட்டியலை அரசு கேட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கலை அறிவியல் துறை பேராசிரியர் களைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கூடுதலாக உள்ள பொறியியல் துறை பேராசிரியர்களை அரசு பொறி யியல் கல்லூரிகளுக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டால் தங்களின் பணிக்கும் பதவி உயர்வுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதிகாரிகள் தகவல்

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசு இதுபோன்று இறுதி முடிவு எடுத்ததாக தெரிய வில்லை. ஒருவேளை அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டாலும், அயல்பணி அடிப்படையில்தான் நியமிக்கப்படுவார்களே தவிர நிரந்தரமாக நியமிக்கப்பட மாட்டார்கள். காரணம் பல்கலைக் கழக நிர்வாக விதிமுறைகள் வேறு. அரசு கல்லூரி நிர்வாக விதிமுறைகள் வேறு” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x