

உதகை நகராட்சி மார்க்கெட் கடைகளில் வாடகை பாக்கி பிரச்சினையால் மொத்தமுள்ள 1,587 கடைகளில் 1,395 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 1,587 கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாகக் கடை உரிமையாளர்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்தாமல் உள்ளதால் நகராட்சிக்கு ரூ.38.70 கோடி வாடகை நிலுவைத் தொகை உள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்றவற்றில் நகராட்சி நிர்வாகத்துக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கரோனா ஊரடங்கு காரணத்தால் வியாபாரம் இன்றி வியாபாரிகள் நஷ்டத்தில் உள்ளனர். இச்சூழலில் தற்போது 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்த வாடகைத் தொகையையும் செலுத்தும்படி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டதால் வியாபாரிகள் செய்வதறியாமல் திணறினர்.
இந்நிலையில், இன்று காலை வாடகை செலுத்தாத 1,587 கடைகளில் 1,395 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் இறங்கியது. மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்ததும் மார்க்கெட் வியாபாரிகள் ஒன்று கூடியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீல் நடவடிக்கை காரணமாக மார்க்கெட்டுக்குச் செல்லும் சாலைகளை போலீஸார் மூடி, போக்குவரத்தைத் திருப்பிவிட்டனர்.
இந்நிலையில், மார்க்கெட்டுக்குக் காய்கறி கொண்டுவந்த விவசாயிகள் அவற்றை மண்டிகளில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டன் கணக்கில் முட்டைகோஸ், பட்டாணி, அவரை, புரூக்கோலி, டர்னிப், பீட்ரூட், முள்ளங்கி ஆகிய காய்கறிகள் தேங்கின.
விரக்தியடைந்த சில வியாபாரிகள் காய்கறிகளைத் தரையில் கொட்டினர். மேலும், கொள்முதல் செய்யப்படாத காய்கறிகளை மார்க்கெட்டிலிருந்து திரும்பக் கொண்டு சென்றனர். மார்க்கெட் மூடப்பட்டதால், காய்கறிகள் கொள்முதல் செய்யப்படாமல் அவை அழுகி, தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
வியாபாரிகள் கைது
இந்நிலையில், வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.ஏ.முஸ்தபா, பொருளாளர் ராஜா முகமது தலைமையில் மார்க்கெட்டில் ஆணையருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, வியாபாரிகளை போலீஸார் கைது செய்தனர். இதற்காக மார்க்கெட்டுக்கு வெளியே வாகனங்களைக் கொண்டுவந்து, அவற்றில் கைது செய்யப்பட்ட வியாபாரிகளை ஏற்றினர்.
ஆணையர் வாகனம் முற்றுகை
இந்நிலையில், ஆணையர் சரஸ்வதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, வியாபாரிகள் மார்க்கெட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆணையர் சரஸ்வதி தனது வாகனத்தில் வந்து, மார்க்கெட்டுக்குள் செல்ல முற்பட்டார். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆணையரின் வாகனத்தை முற்றுகையிட்டு, ஆணையருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிரடிப்படை மோகனவாஸ் தலைமையில் அதிரடிப் படையினர் வியாபாரிகளை அப்புறப்படுத்தி, ஆணையரின் வாகனத்தை மீட்டு அனுப்பி வைத்தனர். வியாபாரிகள் எதிர்ப்பால் ஆணையர் மார்க்கெட்டுக்குள் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றார். போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, உதகையில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வியாபாரிகள் மார்க்கெட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் நகராட்சி வருவாய் அலுவலர் பால்ராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், கடை வாடகைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், பிரச்சினை முடியும் வரை வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனர்.