புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராகப் போட்டியின்றித் தேர்வாகிறார் ராஜவேலு

முதல்வர் ரங்கசாமியுடன் வந்து துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு. அருகே அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா.
முதல்வர் ரங்கசாமியுடன் வந்து துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு. அருகே அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா.
Updated on
1 min read

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த ராஜவேலு மனுத்தாக்கல் செய்துள்ளார். பெரும்பான்மை அதிகமுள்ளதால் இவர் போட்டியின்றித் துணை சபாநாயகராக உள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங். - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி கடந்த மே 7-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். ஜூன் 16-ல் சபாநாயகரும், 27-ல் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், நாளை (ஆக.26) காலை 9:30 மணிக்கு, 15-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அன்றே துணை சபாநாயகர் தேர்தல் மற்றும் பதவியேற்பு நடைபெறுகிறது.

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான மனுவை இன்று (ஆக.25) பகல் 12 மணி வரை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல்வர் ரங்கசாமியுடன் வந்து என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு, துணை சபாநாயகர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்மொழிய, அமைச்சர் தேனி ஜெயக்குமார் வழிமொழிந்தார்.

இதுபற்றி, சட்டப்பேரவை உயர் அதிகாரிகள் கூறுகையில், "தேர்தல் நடைபெற ஒருவர் மட்டும் மனுத்தாக்கல் செய்திருந்தால், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார். அந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் சபாநாயகர் செல்வம் வெளியிடுவார். அதைத் தொடர்ந்து, நாளை துணை சபாநாயகர் பதவியேற்பு நடக்கும்" என்று தெரிவித்தனர்.

என்.ஆர்.காங். - பாஜக கூட்டணி ஆட்சியில், துணை சபாநாயகர் பதவி என்.ஆர்.காங். கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது துணை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ராஜவேலு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே பலரும் துணை சபாநாயகர் பதவிக்கு ஒரு எம்எல்ஏ பெயரைக் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், ரங்கசாமி இறுதி முடிவுப்படி ராஜவேலுக்கு இப்பதவி தரப்பட்டுள்ளது. பெரும்பான்மை உள்ளதால் வேறு யாரும் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. நாளை சட்டப்பேரவை கூட உள்ளதால், அரசு கொறடா மற்றும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் பதவிகளும் ஓரிரு நாளில் நிரப்பப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in