

சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 127 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது.
தமிழகத்தில் உச்சம் தொட்ட கரோனா வைரஸ் இரண்டாம் அலை, படிப்படியாகக் குறைந்து தினசரி தொற்று எண்ணிக்கை 2,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நேற்று முன்தினம் (ஆக. 23) அமலுக்கு வந்துள்ள புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (ஆக. 25) 127 நாட்களுக்குப் பிறகு சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. இன்று காலை 9 மணி முதலே பொதுமக்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் பலரும் முதல் நாளே பூங்காவுக்கு ஆர்வமாக வருகை தந்துள்ளனர். சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டி நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக, அப்பூங்கா இயக்குநர் கருணபிரியா கூறுகையில், "பூங்காவில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன,
பார்வையாளர்களுக்கு முதலில் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. அது இயல்பு நிலையில் இருந்தால்தான் டிக்கெட் வழங்கப்படுகிறது. சானிடைசர், முகக்கவசமும் வைக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்துகிறோம்.
தொடர் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. புலி, மான், சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கும் பகுதிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பேட்டரி வாகனம் உள்ளிட்டவை அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் 7,000 பேர் வரை அதிகபட்சமாக அனுமதிக்கலாம்.
ஏற்கெனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் தற்போது நலமுடன் இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.