Published : 25 Aug 2021 03:15 AM
Last Updated : 25 Aug 2021 03:15 AM

இலவச பேருந்து பயணத்தால் மகளிர் இருசக்கர வாகன திட்டத்துக்கு வரவேற்பில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

இலவச பேருந்து பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மானிய விலை இருசக்கர வாகன திட்டத்துக்கு பெண்களிடம் வரவேற்பு இல்லை என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

உழைக்கும் பெண்களுக்கான ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’,2017-18-ல் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 30 பேர் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

அதேபோல பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பொதுமக்கள் நலனுக்காக மாநில அரசின் நிதி ரூ.70 ஆயிரம் கூடுதலாக வழங்கப்பட்டு, தற்போது ரூ.2.76 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தில், விடுபட்ட உண்மையான பயனாளிகள் 9.11 லட்சம் பேரின் பெயர், விவரங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கு ஒப்புதல்வந்துள்ளதால் தொடர்ந்து இந்ததிட்டத்தை செயல்படுத்த வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:

ஊரக வீட்டுவசதி திட்டத்தின்கீழ், 2016 முதல் 2021 வரை 8,17,439 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டதில், இதுவரை 3,03,013 வீடுகள்மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இதனால் 2020-21 ஆண்டுக்கான நிதியைமத்திய அரசிடம் இருந்து பெறமுடியவில்லை. மகளிருக்கானஇருசக்கர வாகன திட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆட்சியில்பணிக்கு செல்லும் பெண்களுக்குஅடிப்படையாக சென்று சேரவில்லை. இன்று அனைத்து பெண்களும் இலவச பேருந்து பயணத்திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். இதனால், இருசக்கர வாகனதிட்டத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. பெண்கள் மத்தியில் அந்ததிட்டத்துக்கு வரவேற்பு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜக வலியுறுத்தல்

பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘‘உழைக்கும் பெண்களுக்கான இரு சக்கர மானியம் திட்டம்,பெண்களுக்கு இறக்கைகளாகமாறியிருக்கிறது. ஆகவே, இத் திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x