

உதவித் தொகையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும்27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்றுதிமுக, தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், பட்ஜெட்டில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே, சட்டப்பேரவையில் செப்.1-ம் தேதி, மாற்றுத் திறனாளிகள் துறை மானியக் கோரிக்கையிலாவது, உதவித் தொகையை ரூ.1,500 ஆக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகள் அளவிலான அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்டவை முன்பு வரும் 27-ம் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.