

மதுரை அழகர்கோவில் அருகே இஸ்லாமியர் ஒருவர், விஜயவாடாவில் இருப்பதைப் போன்ற கனக துர்க்கையம்மன் கோயிலைக் கட்டி மத நல்லிணக்கத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார்.
மதுரை சூர்யா நகரைச் சேர்ந்தவர் அப்துல் கரீம்(49). இவரது மனைவி ஜெமீமா. இவர்களது மகள் அனிஸ் பாத்திமா(21). அப்துல்கரீம் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பு மூலம் இவர், இலவச கண் சிகிச்சை முகாம், உறவுகளால் ஒதுக்கப்பட்ட முதியவர்களை மீட்டு பராமரிப்பது, வனத்துறை மூலம் ஊர் ஊராகச் சென்று மரக்கன்றுகளை நடுவது உள்ளிட்ட சமுதாயப் பணிகளை செய்து வருகிறார்.
அப்துல் கரீம், மதுரை அருகே அழகர்கோவில் பொய்கைக்கரைப் பட்டியில் 40 சென்ட் இடம் வாங்கி, ரூ.20 லட்சம் செலவில் இந்துக்கள் வழிபடுவதற்காக கனக துர்க்கை யம்மன் கோயிலை கட்டி உள்ளார். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர் ணமிதோறும் வேண்டுதலை நிறை வேற்ற இந்துக்கள் குவிகின்றனர். வெளிச்சத்துக்கு வராத இந்த இஸ்லாமியரின் மதங்களைக் கடந்த சேவை, அப்பகுதி மும்மதத்தவரிடம் சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்துல் கரீம் கூறிய தாவது:
மதுரை கல்லூரியில் பி.எஸ்சி., தத்துவம் மற்றும் உளவியல் படித் தேன். அதன்பின், ஓராண்டு சித்தா கல்வி பயின்று சித்த மருத்துவ ரானேன். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் தத்துவங்களை படித்ததால் எல்லா மதங்களிலும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
சமத்துவம் சமுதாயம் ஏற்பட..
இறை ஒளி ஒன்றுதான். அந்த ஒளியைத்தான் எல்லோரும் தேடுகி றோம். ஜாதி, பேதங்களை அகற்றி சமத்துவ சமுதாயம் ஏற்படவே, இக்கோயிலை கட்டினேன். எனது நண்பர் ரமேஷ்குமாரின் உந்துதலே, இக்கோயில் கட்டுவதற்கு காரணம்.
இரண்டு பேரும், 2001-ம் ஆண்டு விஜயவாடா சென்றிருந்தோம். அங்குள்ள பிரசித்தி பெற்ற கனக துர்க்கையம்மன் கோயிலை பார்த்தோம். அந்த கோயிலை ஒரு இஸ்லாமியர்தான் கட்டியதாக அறிந்தேன். அங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லோரும் வந்து செல்கின்றனர்.
அதுபோல, நாமும் ஒரு கோயில் கட்டினால் என்ன என யோசித்து, மதுரையில் கனக துர்க்கையம்மன் கோயிலைக் கட்டினேன். இக்கோயி லில் இருக்கும் கனக துர்க்கை அம்மன் சிலை, விஜயவாடாவில் உருவாக்கப்பட்டது.
2005-ம் ஆண்டு எனது சொந்த பணம், நண்பர்கள் உதவியுடன் ரூ.20 லட்சத்தில் இக்கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி னேன். கோயில் கட்டியதால் நான் இந்துவாக மாறவில்லை. வழக்கம்போல வெள்ளிக்கிழமை களில் தொழுகைக்குச் செல்வேன். குடும்பத்திலும், வீட்டிலும் முஸ்லி மாக இருப்பேன். வீட்டுக்கு வெளியே இந்துவாக, கிறிஸ்தவ னாக இருப்பேன். எனது மனைவி, மகளும் இந்த கோயிலுக்கு வருவர்.
இங்கு இந்துக்கள், முஸ்லிம் கள், கிறிஸ்தவர்கள் வருகின்ற னர். அதனால், இந்த கோயிலை யும் இங்குள்ள மக்கள் விஜய வாடா கனக துர்க்கை அம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர். இக்கோயிலில் உண்டியல், நன்கொடை எதுவும் பெறுவ தில்லை. இக்கோயிலில் வந்து வழிபடுபவர்கள், ஒவ்வொரு பவுர் ணமிக்கும் அன்னதானம் செய்வர். இங்கு பவுர்ணமியன்று யாகம் நடத்துவது சிறப்பு. அதனால், பல்வேறு ஊர்களில் இருந்து வந்து யாகம் நடத்துவர் என்றார்.
சமத்துவக் கோயிலாக மாற்றத் திட்டம்
அப்துல்கரீம் மேலும் கூறியதாவது:
இந்தக் கோயிலில் ஒருபுறம் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும், மற்றொருபுறம் கிறிஸ்தவர்கள் ஜெபிக்கவும் இடம் ஏற்பாடு செய்து வருகிறேன். வரும் காலத்தில், இதை ஒரு சமத்துவக் கோயிலாக மாற்றத் திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜைகள் மட்டும் இந்த கோயிலில் நடத்தப்படுகிறது.
அதற்காக தனி அர்ச்சகர் உள்ளார். அவர் வராவிட்டால் நானே சுதர்சனம், துர்க்கை, லட்சுமி உள்ளிட்ட பரிகார ஹோமங்கள், யாகங்களை செய்வேன். எனது ஒரே நோக்கம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மதங்களைக் கடந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என்றார்.