

‘போன் பே’, ‘கூகுள் பே’ உட்பட ஆன்லைன் செயலி வழியான பரிவர்த்தனைகளில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையை அடுத்த கந்தன்சாவடியில் டீக்கடை நடத்திவரும் துரை என்பவர் வாடிக்கையாளர்கள் வசதிக்காக ‘போன் பே’ செயலி வைத்துள்ளார். இதற்கான ‘க்யூஆர் கோடு’ ஸ்டிக்கர் கடையில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘க்யூஆர் கோடு’ வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம், துரையின் வங்கிக்கணக்கில் சேராமல் இருந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த துரை, கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீஸார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், இரவு கடை பூட்டப்பட்ட பின்னர் 2 பேர் வந்து அங்கிருந்த ‘க்யூஆர் கோடு’ஸ்டிக்கரை மறைத்து, அதேபோன்ற மற்றொரு ஸ்டிக்கரை ஒட்டி நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் விசாரணையில் பெருங்குடியைச் சேர்ந்த வல்லரசு(22), அடையாறு பகுதியைச் சேர்ந்த ராபர்ட்(30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 போலி ‘க்யூஆர் கோடு’ ஸ்டிக்கர், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக இணையதள பாதுகாப்பு அமைப்பின் தலைவர் வி.ராஜேந்திரன் கூறும்போது, ‘‘போன் பே’, ‘கூகுள் பே’ உட்படஆன்லைன் செயலி வழியானபரிவர்த்தனைகளில் கவனமுடன் இருக்க வேண்டும். உரிமையாளர்கள் ‘க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை கடையில் ஓரிரு இடங்களில் மட்டுமே ஒட்ட வேண்டும்.
சிறிய கடைகள் அதற்குரிய பலகையில் ஸ்டிக்கரை ஒட்டி கடை மூடப்படும்போது பாதுகாப்பாக உள்ளே எடுத்து வைக்க வேண்டும். கடையின் வெளிப்புற சுவர்களில் ஒட்டும்போது இத்தகையமோசடிகளுக்கு வழிவகை செய்துவிடும். வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொள்வதில் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் ‘க்யூஆர் கோடு’ மூலம் பண செலுத்திய பின்னர் தங்கள் கணக்குக்கு பணம் வந்துவிட்டதை உறுதிசெய்ய வேண்டும். குறுஞ்செய்தி அல்லது அதற்கான செயலி வழியாக பணவரவுகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து சைபர் வல்லுநர்கள் சிலர் கூறும்போது, “போதிய விழிப்புணர்வு இன்மை, கவனக்குறைவு ஆகியவைதான் இந்த தவறுகளுக்கு முக்கிய காரணியாகும். சிறிய அளவில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஈர்ப்பதற்காக பல்வேறு ஆன்லைன் செயலிகள் வழியாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
அதேநேரம் அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்துகொள்வதில்லை. ஒரு தொழில்நுட்பம் குறித்த அடிப்படை புரிதல் இல்லாதபட்சத்தில் அவற்றை தவிர்ப்பதே சிறந்தது.
ஆன்லைன் செயலி வழியான பணப்பரிமாற்றத்துக்கு குறைந்த மற்றும் அதிகபட்ச தொகையை நிர்ணயித்து கொள்ள வேண்டும். க்யூஆர் கோடு ஸ்டிக்கரில் கடையின் பெயர் எழுதி வைப்பது உட்பட குறியீடுகளை மேற்கொள்ளலாம்’’என்றனர்.