

விழுப்புரத்தில் திமுக கொடிக் கம்பம் நட முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில், பந்தல்ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் குடும்ப திருமண விழா கடந்த 20-ம் தேதி மாலை மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இத்திருமண விழாவுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பு விடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் வரவேற்புக்காக திருமண மண்டபத்துக்குச் செல்லும் சாலையில் திமுக கட்சி கொடி கட்டப்பட்ட இரும்புக் கம்பம் நடும் பணி நடைபெற்றது.
இப்பணியில் 8-ம் வகுப்பு படித்து வரும் விழுப்புரம் ரஹீம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் தினேஷ்(12) என்ற சிறுவனும் ஈடுபடுத்தப்பட்டார். அவர் நட்ட இரும்பு கொடிக் கம்பம் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி உயிர்இழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினர் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் (IPC 174) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சம்பவத்துக்கு பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து சிறுவன் உயிரிழப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில், “பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது.
திமுகவினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். சிறுவன் தினேஷை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாரின் துயரில் துணை நிற்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிறுவனை வேலைக்கு அழைத்துச் சென்றவிழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற பந்தல் பணி ஒப்பந்ததாரரை விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் நேற்று மாலை கைது செய்தனர். ஐபிசி 304 (2) கொலை, கொலை ஆகாத மரணம் என்ற ஒரு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர் கைது செய்யப்படுள்ளார்.