

கோவை அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலையில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமாக 14.61 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தமிழ்நாடு கோழி அபிவிருத்தி நிறுவனம் (டாப்கோ) கடந்த 1966-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித பயன்பாடும் இல்லாமல் அங்குள்ள கட்டிடங்கள் பாழடைந்துள்ளன. எனவே, அந்த இடத்தை சீரமைத்து ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சத்தியகுமார் கூறியதாவது:
கோழி வளர்ப்பில் தனியார் நிறுவனங்கள் அதிகரித்ததால், தொடர்ந்துபல ஆண்டுகள் செயல்பட்டுவந்த இந்த நிறுவனம், நஷ்டத்தால் மூடப்பட்டுவிட்டது. முன்பு இங்கு கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதத்தில் விவசாயிகளுக்கு வாரந்தோறும் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் பயனடைந்தனர். எனவே, தற்போது இங்கு ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை அமைத்தால் கோவை, திருப்பூர்மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். இங்கு ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பதன் மூலம் கால்நடை வளர்ப்போருக்கு வெற்றிகரமாக சந்தைப்படுத்துதல் பயிற்சி, பொருளாதார ரீதியிலான வழிகாட்டும் பயிற்சி, பால்வளப் பெருக்கம், கால்நடைகள் வளர்ப்பின் நவீன யுக்திகளை கையாளுதல் போன்ற பயிற்சிகளை அளிக்க முடியும்.
இதன்மூலம் தண்ணீர் இன்றி நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து கால்நடை வளர்ப்பு செய்து லாபம்பெற முடியும். தற்போது நடைபெற்றுவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கையில் இந்த திட்டத்துக்கு நிதிஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் தலைமைச்செயலர் தென்காசி எஸ்.ஜவஹர் கூறும்போது, “இந்த விஷயம் தொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சாத்தியக்கூறுகள்
கால்நடை பராமரிப்புத் துறையின் கோவை மண்டல இணை இயக்குநர் ஆர்.பெருமாள்சாமி, சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குநருக்கு கடந்த 2019டிசம்பர் 18-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், "கால்நடை, கோழி வளர்ப்போர் பயன்பெறும் வகையில் கால்நடை துறைக்கு சொந்தமான அந்த நிலத்தை முற்றிலும் சீரமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் கால்நடை தீவன தோட்டம் அமைக்கலாம். மேலும், அந்த இடத்தை ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையாக மாற்றம் செய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. குழு அமைத்து அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றம் செய்யலாம் என பரிந்துரைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.