Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

‘டிராகன் ' பழ சாகுபடியில் வெற்றிபெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்: வறட்சிக்கு ஏற்ற பயிர் என பரிந்துரை

தனது வயலில் விளைந்த டிராகன் பழங்களை காட்டும் ஓய்வுபெற்ற ஆசிரியர் கோபாலக்கண்ணன்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் ‘டிராகன்’ பழ சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

இண்டூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிஓய்வு பெற்றவர் கோபாலக்கண்ணன். விவசாயத்தின் மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். பணி ஓய்வுக்குப் பின்னர் தீவிர ஆர்வத்துடன் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இண்டூர் அருகிலுள்ள இ.கே.புதூர் கிராமத்தில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. இங்கு தென்னை, சப்போட்டா, பப்பாளி, நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்கிறார். இதற்கிடையில், ‘டிராகன்’ பழத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் 4 செடிகளில் தொடங்கிய சாகுபடியை தற்போது100 செடிகளாக விரிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து முன்னாள் ஆசிரியர் கோபாலக்கண்ணன் கூறியது:

தருமபுரி மாவட்டம் வறட்சி மிகுந்த மாவட்டம். எங்கள் நிலம் உள்ள பகுதியும் அதிக நீர்வளம் இல்லாத பகுதி. எனவே, வறட்சியை தாங்கும் வகையிலும், நவீன சூழலில் சந்தை வாய்ப்புக்கு ஏற்ற வகையிலுமான பயிர் குறித்து இணையதளத்தில் தேடினோம். அப்போது, டிராகன் பழம் குறித்து அறிந்தோம். பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து முதற்கட்டமாக 4 செடிகளை தருவித்து நட்டு வளர்த்தோம். டிராகன் பழச் செடிகள் நடவு செய்த 3 ஆண்டுகளுக்கு பிறகே பலன் தரத் தொடங்கும். ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதிக பழங்களை தரும். இந்தச் செடிகளுக்கு ஈரப்பதம் மட்டும் இருந்தால் போதும். நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை என்பதால் பூச்சிக்கொல்லி தெளிப்பும் இல்லை.

சில நேரம் செவ்வெறும்புகளாலும், வேர்ப்பு ழுக்களாலும் செடிகளுக்கு சேதம் ஏற்படும். அதை மட்டும் முறையாக நிர்வகித்து கட்டுப்படுத்த வேண்டும். ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரை இந்த பழங்களுக்கான சீசன். பூ தருணத்தில் செயற்கை மகரந்த சேர்க்கை மேற்கொண்டால் பழங்களின் அளவு பெரிதாகக் கிடைக்கும். ஒரு மொக்கு பூவாகி, காயாகி பழமாக 2 மாதம் தேவைப்படும்.

சுமார் 30 சென்ட் பரப்பில் 100 செடிகளை நடவு செய்துள்ளோம். 2015-ம் ஆண்டு 4 செடிகளில் தொடங்கிய சாகுபடியை ஆண்டுக்கு ஆண்டு விரிவுபடுத்தி 100 செடிகளாக அதிகரித்துள்ளோம். இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி-3 போன்ற சத்துக்கள் இருப்பதாகவும், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும் சிறந்த பலன் தருவதாகவும் மருத்துவ உலகம் கூறுவதால் டிராகன் பழங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

எங்கள் நிலத்தில் விளையும் பழங்களை கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரையிலான விலையில் விற்பனை செய்கிறோம். வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கிலோ ரூ.100 வரை கூட விற்பனை செய்கின்றனர். டிராகன் பயிர் சாகுபடிக்கென தோட்டக்கலைத் துறையில் உள்ள மானிய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். எதிர்காலத்தில் மேலும் 1 ஏக்கர் வரை இந்த பழப் பண்ணையை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x