Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

சென்னை மாநகரின் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் புதிய திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை

சென்னை மாநகரின் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் புதிய திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

சென்னை மாநகரின் கட்டமைப்பை, சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் சிங்கார சென்னை 2.0 என்னும் புதிய திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், வேறு திட்டங்களை இணைத்து சென்னை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சென்னை மாநகராட்சியில் சாலைகள் மற்றும் நடைபாதைகள் ரூ.300 கோடியில் புதுப்பிப்பு மற்றும் மறு சீரமைக்கப்படவுள்ளன. மீனவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் ரூ.10.75 கோடியில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும். சென்னையில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.120 கோடியில் 144 சாலைகளில் பழுதடைந்த மழைநீர் வடிகால்களுக்குப் பதிலாக புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும். சென்னை மாநகரில் உள்ள 25 நீர்நிலைகள் ரூ.200 கோடியில் புனரமைக்கப்படும்.

நடப்பாண்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 50 புதிய நவீன கழிப்பறைகள் அமைக்கப்படும். மேலும் ரூ.50 கோடியில் 246 கழிப்பறைகள் புனரமைக்கப்படும். சென்னை மாநகராட்சியின் பள்ளிகளின் கல்வித் தரம் மேம்படுத்தப்படும். சிட்டீஸ் திட்டத்தில் 28 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்படுவதுடன் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 17 பள்ளிகளில் ரூ.50 கோடியில் புதிய நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும்.

ராயபுரத்திலுள்ள மாடிப்பூங்கா உட்பட 50 பூங்காக்கள், ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும். ரூ.25 கோயில் பாலங்கள், பாலங்களின் கீழ் பகுதிகள், சாலை மையத்தடுப்புகள், சாலையோரப் பூங்காக்கள் மற்றும் போக்குவரத்து தீவுத் திட்டுகள் போன்ற இடங்களில் செயற்கை நீரூற்று, வண்ண மின் விளக்குகள் அமைக்கப்படுவதுடன் ரூ.2.75 கோடியில் ரிப்பன் கட்டிடமும் வண்ண முகப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் மயானங்களில் 10 மயானங்கள் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னை மாநகரிலுள்ள 10.94 லட்சம் குடியிருப்புகளில் 8.24 லட்சம் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இப்பணிகள் 2022 ஜுனில் முடிக்கப்படும். நீலாங்கரை மற்றும் செம்மஞ்சேரியில் குடிநீர் திட்டப்பணிகள் ரூ.89 கோடியில் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநகரில் இதுவரை 8.2 லட்சம் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக இணைக்கப்பட்ட 8 பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் 2022 நவம்பரில் முடிக்கப்படும். ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் - துரைப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், புழல், மாத்தூர், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி, இடையான்சாவடி, சடையான்குப்பம் மற்றும் கடப்பாக்கம் ஆகிய 17 பகுதிகளில் புதிய பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் ரூ.2,056 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x