தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்படும் என அறிவிப்பு- 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக மக்கள் மகிழ்ச்சி

தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்படும் என அறிவிப்பு- 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக மக்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, தாம்பரம் நகராட்சி அதன் அருகில் உள்ள மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றப்படும் என நேற்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரிவான செய்தி நேற்று முன்தினம் 'இந்து தமிழ்' நாளிதழில் வெளியானது.

இந்த அறிவிப்பின் மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலான மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், அரசியல் கட்சியினர் வருத்தத்திலும் குழப்பத்திலும் உள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.ராஜா சட்டப்பேரவையில் தனது முதல் பேச்சில் தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் இவரது கோரிக்கைக்கு அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. தற்போது மாநகராட்சியாக மாற்றப்\படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தாம்பரம் நகராட்சியுடன் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளும், அதனுடன் மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் ஆகிய பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக அமைக்கப்படவுள்ளது. தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 15 ஊராட்சிகள் தற்போது சேர்க்கப்படாது என்றும் ஊரக தேர்தல் நடந்து முடிந்த பின் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட ஒரு வார்டு அமைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின் நகரப்புற தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in