

நிதிச் சுமையை காரணம் காட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதியம் போன்ற வழக்கமான நடைமுறைகளை மறுக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பது உண்மை. ஆனால், அதை காரணமாகக் காட்டி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் அகவிலைப்படி, ஓய்வூதியம் ஆகிய வழக்கமான நடைமுறைகளை மறுக்கக் கூடாது. அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது அரசு ஊழியர்கள்தான்.
அவர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியமும் வழங்குவது அரசின் கடமையாகும். அதை மாற்றும் விதமாக பொது விவாதத்தை கிளப்புவதன் உள்நோக்கம் என்னவோ?
கூடுதல் அகவிலைப்படியும், ஓய்வூதியமும் ஊழியர்களுக்கு தரப்படும் சம்பளத்தின் பகுதிகளே ஆகும். விலைவாசி உயர்வுக்கேற்ப சம்பளம் உயர வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட கொள்கை. ஊதியம் வழங்குவதில் முன்மாதிரியாக செயல்பட வேண்டிய அரசே, தவறான தத்துவத்தை முன்வைத்தால், தொழிலாளர்களின் உரிமைகளை தட்டிப்பறித்துக் கொண்டுள்ள தனியார் முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாகிவிடும்.
தமிழகத்தில் இதே கருத்துகளை ஏற்கெனவே ஆட்சியாளர்கள் செயல்படுத்த முயன்று, மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நாம் அறிந்ததே. நாட்டின் நிதிநிலைமை, நெருக்கடியில் இருக்கும்போது மக்களுடைய வாங்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு தரப்படும் ஊதியம், சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும். அப்போதுதான் வரி வருவாயும் அதிகரிக்கும்.
சரியான தீர்வுகளைத் தேடி நிலைமைகளை சீராக்குவது அரசின் கடமையாகும், அதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நேர்மாறாக செலவினங்களை வெட்டிச் சுருக்கி, அதன் வழியாக நெருக்கடியை தீர்க்கலாம் என்று நினைப்பது, பிரச்சினையை திசைதிருப்புவதாக அமைந்திடும். பொருளாதாரத்தை மேலும் நெருக்கடியில் தள்ளிடும். எனவே, முதல்வர் இதில் தலையிட்டு நிதிச் செலவினங்கள் குறித்த அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.