

புதுச்சேரியில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளின் வளர்ச்சி 6 மாதங்களில் தெரியவரும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி அண்ணா திடலை சுற்றி 250 நகராட்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நகராட்சி சார்பில் மாதம் ரூ.1,500 வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது அண்ணா திடலில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 19 லட்சம் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அண்ணா திடலை சுற்றியுள்ள குபேர் அங்காடி கடைகள் அனைத் தும் அகற்றப்பட்டு வருகிறது. அண் ணாசாலையில் உள்ள கடைகளை உரிமையாளர்களே முன்வந்து அகற்றினர். அண்ணா திடலில் 14 ஆயிரத்து 435 சதுரமீட்டர் பரப்பில் புதிய விளையாட்டரங்கம் அமைய உள்ளது. அடித்தளத்தில் 350 இருசக்கர வாகன நிறுத்துமிடம், தரைத்தளத்தில் 150 கடைகள், முதல் தளத்தில் 250 வீரர்கள் தங்கும் வகையில் 14 கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. அரங்கில் ஆயிரத்து 500 பேர் அமரும் பார்வையாளர் மாடம், அலுவலகம், சேமிப்பு கூடம், பயிற்சிக்கூடம், கழிப்பறையும் கட்டப்பட உள்ளது.
புதிய விளையாட்டரங்கில் 200 மீட்டர் ஓடுபாதை, கால்பந்து, டென்னிஸ், கைப்பந்து, குழந்தை களுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற் பயிற்சிக் கூடம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.260 கோடிக்கு பணிகள் நடக்கிறது. ஒப்பந்த புள்ளிகள் கோரியுள்ளோம். நேருவீதி உள்பட நகரப் பகுதியில் மின்விளக்குகளை மாற்ற வைக்கிறோம். வஉசி, கல்வே கல்லூரிபழமை மாறாமல் புதுப்பிக்கிறோம். கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளை நீட்டிக்கிறோம். கடற்கரை யில் கற்கள் கொட்டப்பட்ட பகு தியை வடக்கு, தெற்கு பகுதிகளை நீட்டிக்க உள்ளோம். கார் பார்க்கிங் பகுதியை ஏற்படுத்த உள்ளோம். சிசிடிவி கேமராக்களை பொருத்த உள்ளோம். அண்ணாதிடல் அழகான திடலாக மாற்ற பணிகள் நடக்கிறது.
6 மாதங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் வளர்ச்சி தெரிய ஆரம்பிக்கும்” என்று குறிப்பிட்டார்.