ஜோலார்பேட்டை அருகே சிறுமி கடத்தல்?- தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை

மாயமான நித்திஷா.
மாயமான நித்திஷா.
Updated on
1 min read

ஜோலார்பேட்டை அருகே 2 வயது சிறுமி மாயமானதை தொடர்ந்து எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி நேரில் விசாரணை நடத்தி சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்தமண்டலவாடி வெள்ளய கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சுந்தரம் (31). இவரது மனைவி நந்தினி (25). இவர்களது மகள் நித்திஷா(2). சுந்தரம் பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நித்திஷா நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார்.

வீட்டின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த நந்தினி மகளை தேடி வெளியே வந்து பார்த்தபோது அங்கு நித்திஷா மாயமாகியிருந்தார். உடனே, அக்கம், பக்கம் என பல இடங்களில் மகளை தேடினார். ஆனால், நித்திஷா காணவில்லை. உடனே, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் சுந்தரத்தின் சகோதாரர் பாண்டியன் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை யாராவது கடத்திச் சென்றார்களா ? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்பதை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சிறுமி மாயமான தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்துக்கு நேற்று நேரில் வந்து நந்தினி மற்றும் சுந்தரத்திடம் விசாரணை நடத்தினார்.

பிறகு, வேலூரில் இருந்து மோப்ப நாய் சிம்பா, திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் மியா ஆகியவை ஜோலார்பேட்டைக்கு நேற்று வரவழைக்கப்பட்டன. மோப்ப நாய்கள் சுந்தரம் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள கலந்தரா வரை சென்று அங்கேயே நின்றது. அதன் பிறகு மீண்டும் சுந்தரம் வீடு நோக்கி வந்தது.

இதைத்தொடர்ந்து, மாயமான சிறுமியை கண்டறிய தனிப்படை காவல் துறையினருக்கு எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை காவல் துறையினர் தீவிர விசராணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in