

நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி தின பண்டிகை நெருங்கும் சமயத்தில், எதிர்பார்த்த அளவுக்கு ‘ஆர்டர்கள்’ இல்லாததால் சிலை தயாரிப்பாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
முழுமுதற் கடவுளான விநாயகரை புகைப்படங்கள் வாயிலாக, நம் வீட்டின் பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டு வந்தாலும், ஆண்டுதோறும் ‘விநாயகர் சதுர்த்தி’ தினத்தன்று சிலை வடிவில் விநாயகரின் உருவத்தை வீட்டிலும், பொது இடங்களிலும் வைத்து வழிபட்டு, அருகில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது நம் மக்களின் வழக்கம்.
அதன்படி, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள், இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, கடந்தாண்டு விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்க அரசு அனுமதிக்கவில்லை. தடையை மீறி இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.
நடப்பாண்டு செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ளது, விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி கோவையில் தெலுங்குபாளையம், செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலை உள்ளிட்ட இடங்களில் வழக்கம் போல் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணி தீவிரமடைந்துள்ளன. ஆனால், விற்பனைக்கான ‘ஆர்டர்கள்’ எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் சிலை தயாரிப்பாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
ஆர்டர்கள் இல்லை:
தெலுங்குபாளையத்தில் சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சக்திவேல் முருகன் ‘இந்து தமிழ்திசை ’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ நான் கடந்த 45 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன்.வழக்கமாக 2 அடி முதல் 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். ஆனால், அரசின் உயரக் கட்டுப்பாடுகளால் தற்போது 9 அடி உயரம் வரை மட்டுமே சிலைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. 12 அடி உயர சிலைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்படுகின்றன.
நடப்பாண்டு உழவர்களை போற்றும் வகையில் 2 மாடுகளுடன் ஏர் கலப்பையை பிடித்துக் கொண்டு இருக்கும் விவசாயி மாதிரி சிலை, டிராகன் விலங்கின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலை ஆகியவை புதியதாக தயாரிக்கப்பட்டுள்ளன. அது தவிர, தாமரையின் மீது அமர்ந்திருப்பது போல், சிங்கம், மயில், நந்தி, எலி, மான், அன்னம் ஆகியவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்று, கையில் இசைக்கருவிகள் ஏந்தி நிற்பது போன்று, சிவன் சிலையை ஏந்தி நிற்பது, இருசக்கர வாகனத்தை முருகன் ஓட்டிக் கொண்டு பின்னால் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற வடிவங்களிலும் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையில், கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூல் ஆகியற்றை கரைத்து, பூச்சி அரிக்காமல் இருக்க அதில் மயில் துத்த பொடியை கலந்து டையில் போட்டு, உருவம் கொடுத்து, உருவம் தாங்கி நிற்க குச்சிகள் பொருத்தி சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நீரில் எளிதில் கரையும் பெயின்ட் சிலைகளுக்கு அடிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1,500 முதல் ரூ.25 ஆயிரம் வரை உயரத்துக்கு ஏற்ப சிலைகள் விற்பனை செய்யப்படும்.
முருகன் இருசக்கர வாகனம் ஓட்ட, பின்னால் விநாயகர் அமர்ந்து இருப்பது போல் உள்ள சிலை. படம் : ஜெ.மனோகரன்.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே ஆர்டர் வந்து விடும். கோவையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வந்து ஆர்டர் கொடுத்து சிலையை பெற்றுச் செல்வர்.இந்த நேரத்துக்கு எல்லாம் சிலை தயாரிப்புக் கூடங்கள் பரபரப்பாக இருக்கும். கரோனா அச்சத்தாலும், பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு அனுமதிக்குமா என இன்னும் தெரியாததாலும் சிலைகளுக்கு ஆர்டர் இதுவரை வரவில்லை. தயாரித்த சிலைகள் தேங்கிவிடுமோ என அச்சமாக உள்ளது,’’ என்றார்.
அரசின் உத்தரவு:
காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ விநாயகர் சிலைகள் வைக்கப்படுவது தொடர்பாக அரசு சார்பில் என்ன வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படுகிறதோ, அந்த வழிமுறைகள் பின்பற்றப்படும்,’’ என்றனர். இந்து அமைப்பினர் கூறும்போது,‘‘ விநாயகர் சதுர்்த்தியன்று, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, சிலைகள் தயாரிப்புக்கான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதிக்க வேண்டும்,’’ என்றனர்.