Published : 24 Aug 2021 06:41 PM
Last Updated : 24 Aug 2021 06:41 PM

சென்னையின் 200 வார்டுகளில் வரும் 26-ம் தேதி கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 26.08.2021 அன்று, 400 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஆக. 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தமிழக அரசு கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில், மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 23.08.2021 வரை 25,72,540 முதல் தவணை தடுப்பூசிகள், 11,07,473 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என, மொத்தம் 36,80,013 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1,409 நபர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 1,187 முதல் தவணை தடுப்பூசியும், 222 இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை செயல்படுத்தும் வகையில், 26.08.2021 அன்று மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டுக்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என, மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, கோவிட் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், 200 சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அ) சமுதாய நல மருத்துவமனைகள் (அ) மினி கிளினிக்குகள் (அ) வார்டு அலுவலகங்கள் (அ) பகுதி அலுவலகங்கள் (அ) பள்ளிகள் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும், 200 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் 26.08.2021 அன்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/mega_camp/ என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x